இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.
2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.
3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.
4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.
6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.
7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.
8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.
9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.
10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.
11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.
நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி
No comments:
Post a Comment