Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Sunday, January 10, 2016

2016ல் இந்திய ஸ்மார்ட்போன் தொழில் பிரிவு


நடப்பு 2016 ஆம் ஆண்டில், இந்திய ஸ்மார்ட் போன் தொழில் பிரிவில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட உள்ளன. உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், 50% பேர், மொபைல் போன் வழியாக மட்டுமே, இணைய இணைப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நடப்பு ஆண்டில், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில், வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக, இப்பிரிவில் ஆய்வு மேற்கொள்ளும் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இணையப் பயன்பாட்டில் ஏற்பட்டு வரும் வேகமான வளர்ச்சி, ஸ்மார்ட் போன் தயாரிப்பிற்குத் துணை நிற்கும். அத்துடன், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கையை உயர்த்தும். 4ஜி / எல்.டி.இ. தொழில் நுட்பம் தரும் ஊக்கத்தில், புரோகிராம்கள் வடிவமைக்கும் தொழில் பிரிவில், முன்னேற்றம் ஏற்படும். இந்த வளர்ச்சியை நாம் சில பிரிவுகளாகக் காணலாம்.

அனைத்து மக்களுக்கான ஸ்மார்ட்போன் பயன்பாடு: 


சாதாரண வசதிகளைக் கொண்ட போன்களின் பயன்பாட்டிலிருந்து, ஸ்மார்ட் போன்களுக்கு மாறுவோரின் எண்ணிக்கை, அபரிதமான எண்ணிக்கையில் உயர இருக்கிறது. இந்த பயனாளர்கள், எப்போதும் தொடர்பில் இருப்பது எத்தகைய வசதிகளை, ஆச்சரியங்களைத் தருகிறது என்பதை வியப்புடன் அனுபவிப்பார்கள். இந்தப் பிரிவில் அடுத்த வளர்ச்சி, மாநில மொழிகளின் பயன்பாட்டில் அமையும். 
ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் கிடைக்கும். இவை பயன்படுத்துவதில் அதிக பட்ச எளிமையினைக் கொண்டவையாக இருக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்த இருக்கும் அடுத்த 10 கோடி பேருக்கு தங்கள் மொழிப் பயன்பாட்டுடன், மற்றவருடன் தொடர்பு கொள்வதற்கான செலவும் குறைவானதாக அமையும். இது குறித்த விழிப்புணர்ச்சியும் மக்களிடையே அதிகமாகப் பரவும்.

வரி கட்டமைப்பு: 


வர இருக்கும் வணிக வரி அமைப்பிலான மாற்றங்கள், ஸ்மார்ட் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சீன நாட்டிலிருந்து எளிதாக இனி இந்தியாவிற்குள் போன்கள் வருவது சிரமமாக அமையும். புதிய வரி கட்டமைப்பு, இந்திய நிறுவனங்களுக்கு அவர்களின் செயல்பாட்டிற்கு உதவுவதாகவும், இந்தியா முழுமையும் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டு சென்று விற்பனை செய்வதில் துணை புரிவதாகவும் அமையும்.

பெரிய திரைகள்: 


ஸ்மார்ட் போன்களில், ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியும் பணிகளில் 80% பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இவற்றின் திரை அளவு பெரியதாக அமையும். அதன் அடிப்படையில், அனைத்துமே பெரிய அளவில் வடிவமைக்கப்படும். இது ஸ்மார்ட் போன் தொழில் பிரிவுகளுக்கு உற்சாகத்தை அளித்து, புதிய மாடல்களை வடிவமைக்க உதவும்.

4ஜி / எல்.டி.இ. பரவலாக்கம்: 


2015 ஆம் ஆண்டிலேயே, 4ஜி மொபைல் இணைப்பு சேவை பரவத் தொடங்கியது. 2016ல் இது வலுப்பெறும். மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பெரிய அளவிலான நிறுவனங்கள், மக்களிடையே பரவலாகத் தங்கள் சேவையைக் கொண்டு சேர்க்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், 4ஜி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எல்.டி.இ. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான புதிய உரிமங்கள், நடப்பு ஆண்டிலும் தரப்பட இருப்பதால், டிஜிட்டல் இந்தியாவினை அமைப்பதில், 4ஜி சேவை நல்ல பங்கினை அளிக்கும். இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே, 4ஜி பயனாளர்களுடன், 2ஜி மற்றும் 3ஜி பயனாளர்களும் இயங்குவார்கள்.

உள்நாட்டு தயாரிப்பு: 


மொபைல் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களின் செயல்பாடு, 2016ல் முக்கிய இடத்தைக் கொண்டதாக இருக்கும். தயாரிப்பு திறன் கூடுதலாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்பட்டு, தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும். உள் நாடு மற்றும் வெளிநாடு தயாரிப்புகளுக்கிடையே, நல்ல உற்சாகமான போட்டி இருக்கும். இதனால், மக்களுக்கு நல்ல போன்கள், அவர்கள் வாங்கும் விலையில் கிடைப்பது அதிகரிக்கும். இதனால், புதிய முறை வர்த்தக நிலைப்பாடுகள், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில் ஏற்படும். மொபைல் போன் தயாரிப்பில் தேவைப்படும் துணை சாதனங்கள் தயாரிப்பு பிரிவிலும், கூடுதல் எண்ணிக்கையில் நிறுவனங்கள் தோன்றும். உலக அளவில் இத்தகைய சாதனங்களைத் தயாரித்து வழங்குபவர்கள், இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க போட்டியிடுவார்கள். ஆசிய மற்றும் பிற நாடுகளுக்கான சாதனங்களைத் தயாரிக்க, இந்தியாவை ஒரு களமாக அமைக்க திட்டமிடுவார்கள்.

மொபைல் சாதன வழி சேவை: 


மொபைல் வழியாக சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். 20 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்களை விரைவில் இந்தியா பெறும். பட்ஜெட் விலை சாதனங்கள், குறைந்த கட்டணத்தில் சேவைகள் மற்றும் சாதனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவை என அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து செயலாற்றும் காலம் உருவாகி வருகிறது. இது நடப்பு ஆண்டில் வலுப்பெறும். இதனால் பயனாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதனால், பொழுது போக்கு, பயணங்கள் மேற்கொள்வது, உடல் நலத்திற்கான திட்டங்கள் மற்றும் வங்கி பயன்பாடு ஆகிய சேவைகளை மக்களுக்குச் செம்மையாக வழங்க, நிறுவனங்களிடையே சரியான போட்டி நிலவும். இது புதிய கண்டுபிடிப்புகளையும், சுகமான வசதிகளையும் மக்களுக்குத் தரும்.

நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி

Sunday, February 8, 2015

லேப் டாப் வாங்க சில குறிப்புகள்


லேப்டாப் வாங்கப் போறீங்களா?
அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால்சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது.
டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்துவோர் கூட இவ்வளவு பெரிய சி.பி.யூ டவர், மானிட்ட ரெல்லாம் எதற்கு? லேப்டாப்பே வைத்துக் கொள்வோமே என்று எண்ணும் அளவிற்கு லேப் டாப் என்னும் மடிக் கம்ப்யூட்டர்கள் (மடியில் வைத்து பயன்படுத்தும் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய கம்ப்யூட்டர்கள்) இன்று பிரபலமாகி உள்ளன.
இன்று மார்க்கட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் லேப்டாப் கம்ப்யூட்டருக்கு வரும் விளம்பரங்கள் தான் அதிகம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் கூடுதல் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. எச்.பி, டெல், தோஷிபா, சோனி, லெனோவோ, ஏசர்,காம்பேக் என பல பிராண்டுகளின் மாடல்கள் எங்களிடம் இல்லாத வசதியா என தம்பட்டம் அடிக்கின்றன. திரை அளவு, எடை மற்றும் புராசசர் ஆகியவை குறித்து பல அளவுகளைத்தெரிவிக்கின்றன. முதன் முதலாக லேப் டாப் வாங்க முடிவெடுக்கும் ஒருவர் இவர்களின் விளம்பரத்தைப் பார்த்து எந்த முடிவிற்கும் வராமல் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார்.
இந்த தகவல்களை எப்படி அலசி ஆய்வு செய்து தனக்கு வேண்டிய சரியான லேப்டாப்பினை முடிவு செய்ய இயலாதவர்களாக பலர் உள்ளனர். இத்தகையவர்கள் முதலில் என்ன முடிவுகளை வரையறை செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவை அனைத்துமே பொதுவான அனைவருக்கும் தெரிந்தது தான் நீங்கள் எண்ணினால் நல்லதை நினைத்துப் பார்ப்பது சிறந்தது என எடுத்துக் கொள்ளுங்கள்.
1. விலையும் பணியின் தன்மையும்: முதலில் இன்ன விலை என பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பல மாடல்கள் உள்ளன. விலையை நிர்ணயம் செய்கையில் வரி, வாரண்டி காலம், கூடுதல் வாரண்டி என்றால் கட்ட வேண்டிய தொகை என்பதனையும் சேர்த்து கணக்கிடுங்கள். சிறிய நகரங்களில் இருந்தால் லேப் டாப் வாங்கிட பெரிய நகரத்திற்குச் சென்று திரும்பும் செலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. வேலை என்ன? அடுத்து என்ன வேலையை இந்த லேப் டாப் மூலம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்கவும். செலிரான் பிராசசர் கொண்ட குறைந்த மெமரி கொண்ட லேப் டாப் தேர்ந்தெடுத்து அதில் போட்டோ ஷாப் மற்றும் படங்கள் எடிட்டிங் அடிக்கடி மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிரமமாகும். எனவே விலையை உங்கள் வேலையின் தன்மையை இணைத்து நிர்ணயம் செய்திடவும்.
3. அளவும் எடையும்: ஸ்கிரீன் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் லேப் டாப் கம்ப்யூட்டர்களை வகைப்படுத்துகின்றனர். 13,14,15 மற்றும் 17 அங்குல திரை கொண்ட லேப்டாப்கள் உள்ளன. சிறிய திரை கொண்டது எடை குறைவாக இருக்கும்; எடுத்துச் செல்வது எளிது. பேட்டரியின் லைப் வெகு நாட்கள் இருக்கும். 17 அங்குல திரை கொண்ட லேப் டாப் என்றால் செயல்பாடு நன்றாக இருக்கும். எடையும் விலையும் எடுத்துச் செல்வதும் சற்று சிக்கலாக இருக்கும். 14 மற்றும் 15 அங்குல திரை கொண்ட லேப் டாப்கள் இவற்றை அட்ஜஸ்ட் செய்து போவதாக இருக்கும்.
4. பிராசசிங் திறன், ஹார்ட் டிஸ்க் அளவு,மெமரி மற்றும் கிராபிக்ஸ் திறன்: இன்டெல் ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சிப் பிராசசரை அறிமுகப்படுத்துகிறது. குறைந்ததுடூயல் கோர் சிப் லேப்டாப்பில் இருக்கவேண்டும். எனவே இன்டெல் நிறுவனத்தின் டூயல் கோர் 2 சிப் அல்லது ஏ.எம்.டி. எக்ஸ்2 பிராசசர் இருக்க வேண்டும். சிங்கிள் கோர் பிராசசர் என்றால் ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. அடுத்து எந்த அளவில் ஹார்ட் டிஸ்க் இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் கூட 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. பலருக்கு இது போதுமானது. எனவே உங்கள் லேப்டாப்பில் குறைந்தது இது இருக்க வேண்டும். அடுத்ததாக ராம் மெமரி; பல லேப் டாப்களில் இது 1 ஜிபியாக இருக்கிறது. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு இது சரியாக அமைய வில்லை. எனவே 2 ஜிபி சிஸ்டம் மெமரி உள்ளதாகப் பார்க்கவும்.
அடுத்ததாக டிஸ்கிரீட் கிராபிக்ஸ் (Discrete Graphics):  என்வீடியா மற்றும் ஏ.டி.ஐ (Nvidia’s/ATI)  வழங்கும் கிராபிக்ஸ் வசதிகளை இந்த சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதில் என்வீடியா தான் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. இன்டெல் நிறுவனம் தரும் இன்டக்ரெய்டட் சொல்யூசன்ஸ் சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும்.
5.பேட்டரியின் திறன்: பொதுவாக பேட்டரிகளை அது கொண்டுள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அளவிடுவார்கள். 4 செல் கொண்ட பேட்டரி லேப் டாப்பின் எடையை வெகுவாகக் குறைத்துவிடும்; ஆனால் பேட்டரி லைப் மிகவும் குறைந்துவிடும். 9 செல் பேட்டரி எடையை மிக அதிகமாக்கும். ஆனால் அந்த அளவிற்கு செயல் திறன் பெரிய அளவிலான வேறுபாட்டில் இருக்காது. எனவே 6 செல்கள் கொண்ட பேட்டரி தான் அனைவரும் விரும்பும் பேட்டரியாகவும் பல லேப்டாப்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்தலாம்.
6. மற்றவற்றுடன் தொடர்பு: இது பல வகை தொடர்பினை உள்ளடக்கியது. யு.எஸ்.பி., ஈதர்நெட் மற்றும் பயர்வயர். பெரும்பாலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஸ்டாண்டர்டாக சிலவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பில் தருகின்றனர். இருப்பினும் 3 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது மிக நல்லது. அத்துடன் விஜிஏ / டிவிஐ (VGA/DVI)  போர்ட் இருக்க வேண்டும். வயர்லெஸ் கனெக்டிவிடி பக்கம் பார்த்தால் 802.11 a/b/g கட்டாயமாகத் தேவை. இதனை 802.11n க்கு மேம்படுத்த முடியும் என்றால் நிச்சயம் அதனையே கேட்கவும். இதனால் ஸ்பீட் அதிகமாகக் கிடைக்கும். புளுடூத் 2.0 ஈ.டி.ஆர். தரப்படுவதும் நல்லது. இதன் மூலம் போன் போன்ற சாதனத்துடன் பைல்களைப் பரிமாறுவது எளிதாகும்.
7. வாரண்டி: அனைத்து லேப்டாப்களும் குறைந்தது ஓராண்டு வாரண்டி தருகின்றனர். இது ரிப்பேர் மற்றும் தயாரிப்பில் காணப்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கின்றன. இந்த காலத்திற்குப் பின் பிரச்னை வந்து ரிப்பேர் செய்திடப் போனால் எக்கச் சக்க செலவாகிறது. இந்த அதிர்ச்சி பின்னாளில் ஏற் படாமல் தடுக்க நீட்டிக் கப்பட்ட வாரண்டி தருவதாக இருந்தால் கேட்டு வாங்கவும். அல்லது தொடக்க வாரண்டியே மூன்று ஆண்டுகள் இருந்தால் கேட்டு வாங்கலாம்.
சரி வாங்கிவிட்டீர்களா! அடுத்து என்ன செய்திட வேண்டும்?
1. கிராப் வேர்களை  (crapware)  நீக்குங்கள்: முதல் முதலில் உங்கள் லேப்டாப்பினை இயக்கத் தொடங்கியவுடன் நிறைய சோதனை புரோகிராம்கள், தேவையற்ற பவர் மேனேஜ் மெண்ட் புரோகிராம்கள், புரடக்டிவிடி டூல்ஸ் என்ற பெயரில் நமக்கு என்றும் பயன்படாத புரோகிராம்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்கு பிடிக்கும் என்பதால் மொத்தமாகப் பதிந்திருப்பார்கள். இவை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விட்டு உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களை மட்டும் இன்ஸ்டால் செய்திடவும்.
2. பேட்டரி பராமரிப்பு: பொதுவாக லேப்டாப் பேட்டரிகள் எல்லாம் எப்படி பயன்படுத்தினாலும் சரியாகவே இயங்கும். எளிதாக வீணாகிப் போகாது. இருந்தாலும் இவை கெட்டுப் போகாமல் இருக்க 2அல்லது திறன் இழக்காமல் இருக்க குறிப்பிட்ட கால கட்டத்தில் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்திட வேண்டும். மேலும் ஓரடியாக பேட்டரியை சார்ஜ் செய்திடக் கூடாது. நீங்கள் லேப் டாப் பயன்படுத்த வில்லை என்றால் மெயின் பிளக்கிலிருந்து பேட்டரிக்கான கனெக்ஷனை எடுத்துவிட வேண்டும்.
மேலே கூறப்பட்டவை எல்லாம் சில அடிப்படை செய்திகளே. எந்த ஒரு லேப் டாப் வாங்குவதாக இருந்தாலும் அவற்றின் திறன் கொண்ட மற்ற லேப் டாப்களுடன் ஒப்பிட்டு, பயன்பாடு குறித்து அவற்றின் இணையதளங் களில் தகவல்கள் தேடி பின் வாங்கவும். வாங் குவதற்கு முன் லேப் டாப் விற்பனை செய் பவரின் நிறுவனமும் நிலையானதுதானா என்று பார்க்கவும். அல்லது இணைய தளங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற முகவர்களின் முகவரிகள், அதே நிறுவனங்களின் கிளைகள் பட்டியல் இருக்கும்.
அவற்றை பெற்று தொடர்பு கொண்டு வாங்கலாம்.  லேப் டாப் கம்ப்யூட்டர்களை பெர்சனல் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் நாம் பழுது பார்ப்பது போல பார்க்க முடியாது. மிக நுண்மையான சாதனமாகும். எனவே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்களே கையாளும் எண்ணத்தை விட்டுவிட்டு அதற்கான் நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும். தகுதி கொண்ட டெக்னீஷியனிடம் மட்டுமே காட்டவும்.

Wednesday, October 9, 2013

கூகுள் மாயக் கண்ணாடி






பூவே பூச்சூடவா படத்தில் நதியா அணிந்து வந்த கண்ணாடி பற்றி ஞாபகம் இருக்கிறதா? “இந்தக் கண்ணாடி வழியே பார்த்தால், ஆடையில்லாமல் தெரியும்,” என்று நதியா அடித்துவிட, அவரைப் பார்த்தாலே எஸ்.வி.சேகர் ஓடி ஒளிவார். அது போன்ற அபூர்வக் கண்ணாடியை தயாரிக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், இப்போது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, கூகுளின் புதிய அறிமுகம். அது ஒரு மூக்குக் கண்ணாடி. புளூடூத் கருவியைவிட, கொஞ்சம் பெரியது இந்த கூகுள் கிளாஸ்.
இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டால், இனிமேல் ஒவ்வொரு விஷயத்துக்கும் “கூகுள் கூகுள் பண்ணிப் பார்க்க” வேண்டியதில்லை. கூகுள் கண்ணாடியில், சும்மா ஒரு கண்ணசைவே போதும். கேட்டது கையில் கிடைக்கும், அதுதான் கூகுள் கிளாஸ்.
சுருக்கமாகச் சொல்வது என்றால், இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.
இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. 5 மெகாபிக்ஸல் கொண்ட கேமெரா, வீடியோ பதிவுக் கருவிகள், வைஃபை, புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் 42 கிராம் எடை ஆகிய அம்சங்கள் கூகுள் கிளாஸுக்கு “ஜே” போட வைக்கின்றன.
இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, “ஒகே. கிளாஸ்” என்று சொன்னால் போதும், உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும்.
இதைக்கொண்டு பாட்டு கேட்கலாம், திசையறியலாம், வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. “டேக் எ பிக்சர்” என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். ஏன் நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும். இந்தக் கண்ணாடியின் தனித்துவம், இது சிறப்பான குரல் அடையாளம் காணும் வசதியைக் கொண்டுள்ளதுதான்.
இந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும். ஒரே விஷயம் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்கு ஈடாக, இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிப்பதற்கு ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி தேவை.
இந்த கூகுள் கிளாஸில் சில பிரச்சினைகளும் உணடு. நம் கண்களுக்கு ஒரு செ.மீ. முன்னால் குறுஞ்செய்தி ஒளிர்ந்தால், முதலில் பார்ப்பதற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அது சீக்கிரமே பழகிவிடும் என்கிறார்கள்.
சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன்படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. தொலைபேசிக் கருவியை கையில் எடுக்க வேண்டியதும் இல்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனம் சிதறலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதனால் மனப்பதிவு, மனித மூளைச் செயல்பாடு போன்ற பல விஷயங்களுக்கு மதிப்பு குறைந்து போகும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
அடுத்தவரின் அந்தரங்கத்துக்குள் தலையிடும் என்ற அச்சமும், சமூக இழுக்காக கருதப்படலாம் என்ற எதிர்மறைத்தன்மையும் கூகுள் கிளாஸுக்கு எதிரிகளாக அமையக்கூடும். இந்த இரண்டு விஷயங்களில் அது நம்பிக்கையை வென்றாக வேண்டும். இந்தக் காரணங்களால் இதைத் தடைசெய்யச் சொல்லியும் குரல் எழுப்பப்படலாம். ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடை செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
கூகுளின் இந்தப் புதிய கருவி இப்போது ஆரம்ப கட்ட நிலையில் இருக்கிறது. இன்னமும் நுகர்வோர் மாடலாக விற்பனைக்கு வரவில்லை. இப்போதைக்குப் போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கூகுளின் Glass Project Explorer Kit வழங்கப்படுகிறது. இதைப் பெறுபவர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில், கூகுள் கிளாஸ் அடுத்த வருடம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 41000(தோராயமாக). 2014ம் வருடம் இது உபயோகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் கிளாஸுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நவீன தகவல்தொழில்நுட்பக் கருவிகள் துறையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடை போல, இது மற்றொரு பிரம்மாண்ட தொழில்போட்டியைத் தொடங்கி வைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி:தி ஹிந்து

Friday, September 2, 2011

மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள்



மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய நெறிமுறைகளை மத்திய அரசு கமிட்டி அறிவித்துள்ளது.

கொடிய நோய்கள்…
செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.


மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை, செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.
ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.
அதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மத்திய நிபுணர் குழு
இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.
செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்…” என பரிந்துரைத்துள்ளது.
மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.
மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.
அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.
இவற்றை ஒரேயடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக ‘இந்திய டெலிகிராப் சட்டம் 1885′-ஐ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.

மக்களுக்கு எச்சரிக்கை…
இந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன.
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்… அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.
மற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம்.
உடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிக்கை

மொபைல் போன்களின் கதிரியக்கம் குறித்து இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான்.
இதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. அரசு நடவடிக்கையைவிட தனிப்பட்டோர் ஒத்துழைப்புதான் இதில் முக்கியம் என்று இந்த ஆராய்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 27, 2011

தவிர்க்க வேண்டிய தவறுகள்



வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள்கிறோமோ இல்லையோ, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையேல், வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் கலந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:


பலரின் விண்டோஸ் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இப்போதுதானே, டெஸ்க்டாப்பில் சேவ் செய்தேன், காணலையே? என்று சொல்லிவிட்டு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதே டெஸ்க்டாப் ட்ரைவில் தேடிக் கண்டுபிடிப்போர் உள்ளனர். இந்த தவறுக்குக் காரணம், அளவுக்கு அதிகமான ஐகான்களைக் குவிப்பதுதான். இதனாலேயே விண்டோஸ் இயக்கம், "பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்திடலாமா?' என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:

இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
பவர் பட்டன் அழுத்தி, லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தச் செய்வது, கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும்போது மேற்கொள்ள வேண்டிய செயலாகும். ஏனென்றால் அப்போது வேறு வழி கிடைக்காது.

3. வலுவான பாஸ்வேர்ட்களை நோட்பேடில் எழுதுதல்:


எது வலுவான பாஸ்வேர்ட்? பிறர் எந்த வகையிலும் கண்டறிய இயலாத பாஸ்வேர்ட்களை வலுவான பாஸ்வேர்ட்கள் என்று சொல்கிறோம். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தும் பலரில், ஒரு சிலர், அவற்றை தங்கள் கம்ப்யூட்டரிலேயே நோட்பேடில், ஒரு டெக்ஸ்ட் பைலில் எழுதி வைப்பார்கள். இதனால் வலுவான பாஸ்வேர்ட் உருவாக்கியும் எந்த பயனும் இல்லாமல் போகிறது. நமக்கு பாஸ்வேர்ட்களை உருவாக்கித் தரவும், அவற்றை பாதுகாப்பான பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் பாதுகாக்கவும், பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. விலை கொடுத்தும் சிலவற்றைப் பெறலாம். அவற்றைப் பயன்படுத்தி, நம் பாஸ்வேர்ட்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.

4.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:


ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது; அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம். இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

5. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ் :


டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட் (TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

6.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:


திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம். இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

7. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:


பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.


(நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்)


Friday, April 22, 2011

உங்கள் கம்ப்யூட்டர் பற்றி சில பயனுள்ள தகவல்கள்



அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த

ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும்.

மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது.

சென்ட்(Send) பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும்

இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது.

30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Sendஎன்று சென்று மாற்றவும்.

விண்டோஸ் கீ + ஷார்ட் கட்

கீ போர்டில் இடது புறமாகக் கீழ் வரிசையில் கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் பட்டன்களுக்கிடையில் உள்ளது விண்டோஸ் லோகோ கீ. இதனை வேறு சில கீகளுடன் அழுத்துகையில் நம்மால் சில செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். விண்டோஸ் கீ மற்ற கீகளுடன் இணைக்கும்போது ஏற்படும் செயல்பாடுகள் :
Win key : தனியே அழுத்துகையில் ஸ்டார்ட் மெனு தோன்றும், மறையும்.
Win key + M : அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Win key + Shift + M : மினிமைஸ் செய்த விண்டோக்கள் அனைத்தும் திறக்கப்படும்.
Win key + D : திறந்திருக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் மினிமைஸ் செய்திடும். அடுத்து அழுத்துகையில் மினிமைஸ் செய்யப்பட்ட புரோகிராம்களை காட்டும்.
Win key + Tab: டாஸ்க் பாரில் உள்ளவற்றை சுழற்றிக் காட்டும்.
Win key + E: மை கம்ப்யூட்டர் திறக்கப்படும்
Win key + F: பைல் அல்லது போல்டர் தேடப்படும்.
Win key +F1: விண்டோஸ் ஹெல்ப் விண்டோ கிடைக்கும்.
Win key+L : விண்டோஸ் கீ போர்டு லாக் ஆகும்.
Win key+ BREAK: சிஸ்டம் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
Win key + R : Start menu வில் கிடைக்கும் Run box
Win key + F : Start menu வில் கிடைக்கும் Find window
Win key + E : Explorer தொகுப்பு திறக்கப்படும்.
Win key + Pause/Break : System Properties திறக்கப்படும்.

கம்ப்யூட்டரைச் சற்று கவனிப்போம்


கம்ப்யூட்டரில் தான் இனி வாழ்க்கை என்று ஆகிவரும் இந்த நிலையில், அதனை அவ்வப்போது சரி செய்து, உள்அமைப்பையும் ட்யூன் செய்வது இன்றியமை யாததாகிறது. இல்லையேல் என்றாவது ஒரு நாள், திடீரென நின்று நம்மைத் திணறடித்துவிடும்.

பலமுறை இங்கு எழுதப்பட்டது போல, பைல்கள் பேக் அப், அப்ளிகேஷன் சாப்ட்வேர் அப்டேட்டிங், ஆண்ட்டி வைரஸ் புதுப்பித்தல், பயர்வால் அமைத்தல் என்பவற்றை எல்லாம் நாம் இப்போது வழக்கமாக மேற்கொள்ள பழகிக் கொண்ச்டோம். ஆனாலும் இன்னும் பலர் சற்று சோம்பேறித்தனமாகவும், நம் கம்ப்யூட்டருக்கு அது எல்லாம் ஆகாது என்றும் போலியான தன்னம்பிக்கையுடன், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நம் அன்றாட வாழ்க்கையில், கம்ப்யூட்டருக்கென சற்று வியர்வை சிந்தி உழைக்க நாம் தயாராய் இல்லை என்பதே.
இப்படிப்பட்டவர்களுக்காக சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.

ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது,:

நீங்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இப்போது உள்ள விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளில், சிஸ்டமே மேற்கொள்ளும் சில விஷயங்களை, நாமாகத்தான் விண்டோஸ் எக்ஸ்பியில் மேற்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், தானாக மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் தான் இதனை மேற்கொள்ள வேண்டும். எந்த ட்ரைவினை டிபிராக் செய்திட வேண்டுமோ, அதன் மீது ரைட் கிளிக் செய்துProperties, Tools, Defragment Now என்று சென்று டிபிராக் செய்திடலாம். இப்போது வரும் ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவு மிக அதிகமாக இருப்பதால், சிறிய ஹார்ட் டிஸ்க்குகளில் டிபிராக் செய்து கிடைக்கும் வசதிகள், பெரிய அளவில் இதில் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால், அதில் பெரிய அளவிலான கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் இருந்தால், டிபிராக் குறித்து அவ்வளாவாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

பைல்களை பேக் அப் செய்திடும் பணி.

அடுத்ததாக நாம் கவனமாகச் செயல்பட வேண்டிய பிரிவு, பைல்களை பேக் அப் செய்திடும் பணி. திடீரென நாம் அவ்வப்போது பணியாற்றும் பைல்கள் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், இவை எவ்வளவு முக்கியம் என்று உணர்வீர்கள். பேக் அப் செய்திட எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் அல்லது ட்ரைவ் இமேஜஸ் என்று போவதைக் காட்டிலும்,

இணையத்தில் கிடைக்கும் ஸ்டோரேஜ் தளங்களைப் பார்வையிட்டு அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேக் அப் காப்பிகளை வைத்துப் பாதுகாக்கலாம். போட்டோ பைல்களைச் சேமிக்க பேஸ்புக் ஆல்பம், ப்ளிக்கர், பிகாஸா வெப் ஆல்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

டாகுமெண்ட் பைல்கள் என்றால், நாம் அப்போது நம் சொந்த மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் டாகுமெண்ட்களுக்கு அன்றாடம் பேக் அப் அவசியம். இவற்றின் அளவு ஜிபி அளவிலேயே இருக்கும். டெரா பைட் அளவிற்கு இருக்காது. எனவே இந்த பேக் அப் வசதிக்கும், ஆன்லைன் ஸ்டோரேஜ் உகந்தது.

அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்திடுவது:

சிஸ்டத்தில் இயங்குகின்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்திடுவது இன்னொரு பாதுகாப்பான வழியாகும். சில தொகுப்புகள் தாங்களாகவே அப்டேட் செய்து கொள்கின்றன. விண்டோஸ் சிஸ்டம் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். பிரவுசர், ஆபீஸ் தொகுப்புகள், பிடிஎப் ரீடர் ஆகியவையும் அப்டேட் ஆகும். அல்லது நாம் தான் அவற்றை அப்டேட் செய்திட வேண்டும். இதனால் இவற்றிற்கு மால்வேர் தொகுப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அனைத்தும்Automatically download and install என்ற
வசதியைப் பெற்றிருக்கின்றன.

இந்த அப்ளிகேஷன்கள் அனைத்தும் அப்டேட் ஆகி உள்ளனவா என்றும் சோதிப்பது நல்லது. சில வாரங்களுக்கு முன் எழுதப்பட்ட filehippo என்ற பைலினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இதனைhttp://www.filehippo.com/updatechecker/ என்ற தளத்திலிருந்து பெறலாம். இது ஒரு அப்டேட் செக்கர் பைல். அப்டேட் செய்யப்படாத அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைக் கண்டறிந்து, அவற்றிற்கான தொடர்புகளை உங்களுக்குக் காட்டும். இவற்றில் எல்லாவற்றிலும் முக்கியமானது ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தான். இதனை அவ்வப்போது அப்டேட் செய்வது மிக மிக முக்கியம். காலக் கெடு வரை காத்திராமல், அவ்வப்போது அப்டேட் செய்திடலாம்.

மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கம்ப்யூட்டர் இயக்கங்கள் முடக்கப்படுகையில், சற்றும் பதட்டப்படாமல் நம் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது உறுதி