Monday, February 27, 2012

சார்லி சாப்ளின்


 
 

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். 

உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். 

இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.


பல்லாயிரக்கணக்கான திரை  ரசிகர்களுக்கு நகைச்சுவை எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.

1889 ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலி வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14 ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1913 ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழயங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார் 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும் கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.

1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு  அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின். 

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921 ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார் 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"  என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.

'இடுக்கண் வருங்கால் நகுக'  என்ற திருக்குறளின் வரியை நாம் கேள்வி பட்டிருப்போம். ஒரு சோகமான குடும்ப பின்னணியில் உதித்தாலும் நகைச்சுவை எனும் ஆயுதத்தை கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். 

குடும்ப பின்னனி சரியாக இல்லாவிட்டாலும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டியவர் சார்லி சாப்ளின். 

சார்லி சாப்ளினைப்போலவே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும்  என்பதுதான் சார்லி சாப்ளின் நமது காதோரம் சொல்லும் உண்மை.

Sunday, February 5, 2012

யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!




உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன் தனது தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !! 


ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

                                         

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 



15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.


                                                     
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச் செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
   
                                              
உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 
                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
                                         

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை. 

                  
உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.


நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com


    
வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில்  பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

நன்றிகள் - இப்பதிவை பகிரஅனுமதி அளித்த சங்கரலிங்கம் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.