Sunday, January 10, 2016

2016ல் இந்திய ஸ்மார்ட்போன் தொழில் பிரிவு


நடப்பு 2016 ஆம் ஆண்டில், இந்திய ஸ்மார்ட் போன் தொழில் பிரிவில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட உள்ளன. உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், 50% பேர், மொபைல் போன் வழியாக மட்டுமே, இணைய இணைப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நடப்பு ஆண்டில், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில், வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக, இப்பிரிவில் ஆய்வு மேற்கொள்ளும் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இணையப் பயன்பாட்டில் ஏற்பட்டு வரும் வேகமான வளர்ச்சி, ஸ்மார்ட் போன் தயாரிப்பிற்குத் துணை நிற்கும். அத்துடன், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கையை உயர்த்தும். 4ஜி / எல்.டி.இ. தொழில் நுட்பம் தரும் ஊக்கத்தில், புரோகிராம்கள் வடிவமைக்கும் தொழில் பிரிவில், முன்னேற்றம் ஏற்படும். இந்த வளர்ச்சியை நாம் சில பிரிவுகளாகக் காணலாம்.

அனைத்து மக்களுக்கான ஸ்மார்ட்போன் பயன்பாடு


சாதாரண வசதிகளைக் கொண்ட போன்களின் பயன்பாட்டிலிருந்து, ஸ்மார்ட் போன்களுக்கு மாறுவோரின் எண்ணிக்கை, அபரிதமான எண்ணிக்கையில் உயர இருக்கிறது. இந்த பயனாளர்கள், எப்போதும் தொடர்பில் இருப்பது எத்தகைய வசதிகளை, ஆச்சரியங்களைத் தருகிறது என்பதை வியப்புடன் அனுபவிப்பார்கள். இந்தப் பிரிவில் அடுத்த வளர்ச்சி, மாநில மொழிகளின் பயன்பாட்டில் அமையும். 
ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் கிடைக்கும். இவை பயன்படுத்துவதில் அதிக பட்ச எளிமையினைக் கொண்டவையாக இருக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்த இருக்கும் அடுத்த 10 கோடி பேருக்கு தங்கள் மொழிப் பயன்பாட்டுடன், மற்றவருடன் தொடர்பு கொள்வதற்கான செலவும் குறைவானதாக அமையும். இது குறித்த விழிப்புணர்ச்சியும் மக்களிடையே அதிகமாகப் பரவும்.

வரி கட்டமைப்பு


வர இருக்கும் வணிக வரி அமைப்பிலான மாற்றங்கள், ஸ்மார்ட் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சீன நாட்டிலிருந்து எளிதாக இனி இந்தியாவிற்குள் போன்கள் வருவது சிரமமாக அமையும். புதிய வரி கட்டமைப்பு, இந்திய நிறுவனங்களுக்கு அவர்களின் செயல்பாட்டிற்கு உதவுவதாகவும், இந்தியா முழுமையும் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டு சென்று விற்பனை செய்வதில் துணை புரிவதாகவும் அமையும்.

பெரிய திரைகள்


ஸ்மார்ட் போன்களில், ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியும் பணிகளில் 80% பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இவற்றின் திரை அளவு பெரியதாக அமையும். அதன் அடிப்படையில், அனைத்துமே பெரிய அளவில் வடிவமைக்கப்படும். இது ஸ்மார்ட் போன் தொழில் பிரிவுகளுக்கு உற்சாகத்தை அளித்து, புதிய மாடல்களை வடிவமைக்க உதவும்.

4ஜி / எல்.டி.இ. பரவலாக்கம்


2015 ஆம் ஆண்டிலேயே, 4ஜி மொபைல் இணைப்பு சேவை பரவத் தொடங்கியது. 2016ல் இது வலுப்பெறும். மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பெரிய அளவிலான நிறுவனங்கள், மக்களிடையே பரவலாகத் தங்கள் சேவையைக் கொண்டு சேர்க்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், 4ஜி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எல்.டி.இ. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான புதிய உரிமங்கள், நடப்பு ஆண்டிலும் தரப்பட இருப்பதால், டிஜிட்டல் இந்தியாவினை அமைப்பதில், 4ஜி சேவை நல்ல பங்கினை அளிக்கும். இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே, 4ஜி பயனாளர்களுடன், 2ஜி மற்றும் 3ஜி பயனாளர்களும் இயங்குவார்கள்.

உள்நாட்டு தயாரிப்பு


மொபைல் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களின் செயல்பாடு, 2016ல் முக்கிய இடத்தைக் கொண்டதாக இருக்கும். தயாரிப்பு திறன் கூடுதலாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்பட்டு, தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும். உள் நாடு மற்றும் வெளிநாடு தயாரிப்புகளுக்கிடையே, நல்ல உற்சாகமான போட்டி இருக்கும். இதனால், மக்களுக்கு நல்ல போன்கள், அவர்கள் வாங்கும் விலையில் கிடைப்பது அதிகரிக்கும். இதனால், புதிய முறை வர்த்தக நிலைப்பாடுகள், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில் ஏற்படும். மொபைல் போன் தயாரிப்பில் தேவைப்படும் துணை சாதனங்கள் தயாரிப்பு பிரிவிலும், கூடுதல் எண்ணிக்கையில் நிறுவனங்கள் தோன்றும். உலக அளவில் இத்தகைய சாதனங்களைத் தயாரித்து வழங்குபவர்கள், இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க போட்டியிடுவார்கள். ஆசிய மற்றும் பிற நாடுகளுக்கான சாதனங்களைத் தயாரிக்க, இந்தியாவை ஒரு களமாக அமைக்க திட்டமிடுவார்கள்.

மொபைல் சாதன வழி சேவை


மொபைல் வழியாக சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். 20 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்களை விரைவில் இந்தியா பெறும். பட்ஜெட் விலை சாதனங்கள், குறைந்த கட்டணத்தில் சேவைகள் மற்றும் சாதனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவை என அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து செயலாற்றும் காலம் உருவாகி வருகிறது. இது நடப்பு ஆண்டில் வலுப்பெறும். இதனால் பயனாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதனால், பொழுது போக்கு, பயணங்கள் மேற்கொள்வது, உடல் நலத்திற்கான திட்டங்கள் மற்றும் வங்கி பயன்பாடு ஆகிய சேவைகளை மக்களுக்குச் செம்மையாக வழங்க, நிறுவனங்களிடையே சரியான போட்டி நிலவும். இது புதிய கண்டுபிடிப்புகளையும், சுகமான வசதிகளையும் மக்களுக்குத் தரும்.

நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி

No comments:

Post a Comment