நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.
உலோகம் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு ஆக்கப்பட்ட உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, டிவி போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.
குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.
நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு/வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை அமைக்கும் இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் கட்டளை தருகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்
எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் - ஒரு பணி
(Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி
(Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி
(Multy User Multi task)
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே, அதுவும் ஒரு பணியினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத் தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். பழைய DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். இப்போது இதனை இவ்வகையில் நாம் பயன்படுத்துவதில்லை
ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே ஆனால் அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர்/பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி, விண்டோஸ் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.
விண்டோஸ் வேகமாக இயங்க
விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.
தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம். இன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி, அவற்றில் சில இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.
1. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.
2. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.
3. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com /rx/1353 /xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.
4. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.
5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.
6. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.
7. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.
8. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.
9. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.
10. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாகவும் ராம் மெமரி பயன்படுத்துவது பாவம். இதனை அதிகரிக்கலாமே!
11. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் “Adjust for best performance” தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
12. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் ட்ரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் ட்ரைவ் பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.
13. விண்டோஸ் இயக்கத்திற்கான ட்ரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.
14. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Remove என்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.
15.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் ஆகியவற்றில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.
16. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.
17. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
18. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.
19. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
20. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
21. உங்கள் கம்ப்யூட்டரில் சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி ட்ரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (bios) செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.
22. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.
23.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.
24. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.
25. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி Windows 7க்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.
இறுதியாக ஒரு பரிந்துரை. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா?
இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.
(தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » கம்ப்யூட்டர் மலர் செய்தி
No comments:
Post a Comment