Friday, July 13, 2012

நான் ரசித்த சில சிலேடைகள்

சிலேடை என்றால் என்ன ?   
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவதுண்டு. தமிழிலும் பல பிற மொழிகளிலும் சிலேடைப் பயன்பாடு காணப்படுகின்றது.


தொடர்ச் சொல் பலபொருள் வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில், சிலேடை இரண்டு வகைப்படும். அவை,
  1. செம்மொழிச் சிலேடை
  2. பிரிமொழிச் சிலேடை
என்பனவாகும். 
செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும்.
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)

நான் ரசித்த சில சிலேடைகள்
1. திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும்.

அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.

“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."

அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார்.


2. விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.
ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.

“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"


3. தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: ‘இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'

4. தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.

“ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ.


கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. 
கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

5. ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித்தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர்.
 “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு, டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.

6. அதிவீரராம பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் சகோதரர்கள். இருவரும் புலவர்கள். புரவலர்கள். அவர்களைப் பற்றிப் பாடிய ஒரு புலவர் அவர்களை “அண்டம் காக்கைக்கு ஜனித்தவர்கள்“ என்று பாடினார். வரதுங்கப் பாண்டியனுக்கு ஒரே கோபம். அவர் சற்றே கருநிறம் படைத்தவர். அதனால் தான் அப்படிப் பாடினார் என எண்ணி கோபம் அடைந்தார்.
புலவர் சொன்னார், “ நீங்கள் இருவரும் உலகத்தைக் காக்கவே பிறந்தவர்கள்" அதனால் தான் “அண்டம் காக்க ஜனித்தவர்கள் எனப் பாடினேன்" என்று.


7. ‘பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.

"காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்"
என்று பாடினார்.

பாரதி என்பதை பார் அதி என்று பதம்பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படிச் செய்தார் பாரதி.


4 comments: