Thursday, June 28, 2012

சிட்டுக் குருவி



கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திரும்பிய திசை எங்கும் சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் இன்று மனிதரை(?) விட்டு விலகிச் சென்றது ஏன்? நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் கூடுகட்டி வாழ்ந்தவை இன்று மாயமானது ஏன்?
பெயர்க் காரணமும் வாழ்வியலும் 
உருவில் சிறியதாக இருப்பதாலேயே சிட்டுக் குருவி என்ற பெயர் வந்தது. சிட்டு போல பறந்தான் - என்ற சொல்லாடல் இவற்றிக்கு பறக்கும் திறனை கொண்டே உருவாகிறது எனலாம். HOUSE SPARROW என்றழைக்கப்படும் இவை சிறியதானாலும் தொன்மையான உலகப் பறவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அழிவு
ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய்வதே சிட்டுக்குருவிகளுக்கு எதிரியாகியுள்ளது. ஆண்மையை அதிகப்படுத்தும் சக்தி இவைகளுக்கு இருப்பதாக கூறி சிட்டுக்குருவி லேகியம் விற்கப்படுகிறது. அறிவியல் உண்மை சிறிதும் இல்லாத இம்மாதிரியான கட்டுக்கதைகள் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணமாகிறது. காற்றோட்டமான அறை, தாழ்வாரம் என கட்டி வந்த நமது வீடுகள், நாகரிகமாக மாறிப் போனதால் பறவைகள் வாழ ஏற்ற இடமாக இல்லாமல் போனது.அலைபேசி கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பல பறவைகள் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இவை தவிர இதன் அழிவுக்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றி கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளே.
DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக இதையே பல பறவையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். DDT என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளின் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி. உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு இனம் அழிவுக்குள்ளாகிறது.இவை தவிர நமது வீடுகளில் வாழும் பூனைகள், எலியை உணவாக்கி கொள்வது போல சிட்டுக்குருவியையும் உணவாக்கி கொள்வதாலும் அழிவுக்குள்ளாகின்றன.
தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி செல்லம்மாள் சமைக்க அரிசி இல்லாமல் அடுத்த வீட்டில் கடன் வாங்கி வந்தாள். அரிசியைக் கண்ணில் கண்ட பாரதி அதே நேரத்தில் முற்றத்தில் குருவிகளையும் கண்டார். உடனே செல்லாம்மவிடமிருந்து தானியத்தை வாங்கி குருவிகளுக்காக இரைத்தார். செல்லம்மாவின் முகம் வாடியது. குருவிகள் உண்டது கண்டு பாரதியின் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது!

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும்
மலையும் எங்கள் கூட்டம் என்று பாடிய கவிஞனுக்கு,
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்று பாடிய கவிஞனுக்கு,
யார் பாடம் கற்பிப்பது?

பலர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார்கள். பாரதியோவெனில் இயற்கையின் சிரிப்பில் இறைவனைக் கண்டான். சிட்டுக் குருவி யிடமிருந்து ஆன்மீக பாடங்களையும் கற்றான். அவரது ஆன்மீக தாகத்தைக் காட்டும் பாடல்  இதோ:

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு— (விட்டு)

பெட்டையினோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாதொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு—(விட்டு)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதை சொல்லித் தூங்கிப்பின்
வைகறை ஆகு முன் பாடிக் களிப்புற்று (விட்டு)

தமிழ் திரைப் படங்களில் சிட்டுக் குருவி

தமிழ் திரைபடங்களும் சிட்டுக் குருவிகளைப் பற்றி பாடல்கள் பாடி அவைகளின் மூலம் கருத்துக்களைப் பரப்பியுள்ளன. சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கெது சொந்த வீடு, உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர் வலம் வந்து விளையாடு (படம்: சவாலே சமாளி) என்ற பாடலில் பாரதி பாடலின் தாக்கத்தைக் காண்கிறோம்.

ஏ குருவி குருவி (படம்: முதல் மரியாதை), சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ( படம்: நல்லவனுக்கு நல்லவன்), சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்ன விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல்லே ( படம்: டவுன் பஸ்), சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே (படம்: புதிய பறவை) ஆகிய பாடல்கள் தமிழர்களின் னினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்டன.

பஞ்சதந்திரக் கதைகளிலும் கூட குரங்குக்கு புத்திமதி சொன்ன குருவிகளின் கூட்டுக்கு நேர்ந்த கதி மூலம் ஒரு நீதி புகட்டப்படுகிறது. சங்க இலக்கியத்திலும் குருவிகளைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

இப்படி 2000 ஆண்டுகளுக்கு நமக்கு ஊற்றுணர்ச்சி தரும் சிட்டுக் குருவி இனம் வெகு வேகமாக அழிந்துவருவது கவலை தருகிறது. சிட்டுக் குருவிகளை காப்பது நம் கடமை.


1 comment: