Thursday, January 16, 2014

தீராத முதுகு வலியா; கவலை வேண்டாம்!

முதுகு வலி பிரச்சனை

முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.
இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது வாலெலும்பு வலி என்று பிரிக்கப்படலாம். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலியாகவும் இருக்கலாம்; இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம், ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கலாம். இது மந்தமான வலியாக அல்லது ஊடுருவிப் பாயும் அல்லது மிகுவான அல்லது எரியும் உணர்வையும் உண்டாக்கலாம். வலி கரங்களுக்கும் (கைக்கும்), மேல் முதுகு அல்லது கீழ் முதுகு (கால் அல்லது பாதத்திற்கும் செல்லக்கூடும்) பரவலாம். வலியல்லாமல் பலவீனம், உணர்ச்சியின்மை அல்லது முள் போன்று குத்துதல் போன்ற மற்ற அறிகுறிகளும் உட்படலாம்.

முதுகுவலி மனிதர்களை மிகவும் அடிக்கடி தொந்தரவு செய்யும் பிரச்சனையாகும். அமெரிக்க ஒன்றியத்தில் கீழ்முதுகுவலி (லம்பாகோ என்றும் அழைக்கப்படுவது) மருத்துவரை மிகவும் அதிகமாக சந்திப்பதற்கான ஐந்தாவது முக்கிய காரணமாகும். வயது வந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் தங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முறை முதுகுவலி அனுபவிக்கிறார்கள். வேலை செய்யும் பெரியவர்களில் பத்தில் ஐந்து பேர் ஒவ்வொரு வருடமும் முதுகுவலி அனுபவிக்கிறார்கள்.
1. முதுகு வலிக்கு காரணம் என்ன?
முதுகுத் தண்டு வடம், எலும்பு, நரம்பு தொடர்புடையது. இதற்கு இடையில் உள்ள ஜவ்வு பிதுங்கி, நரம்பை அழுத்துவதால், முதுகு வலி ஏற்படுகிறது. இது போன்று, கழுத்து தண்டு வடத்திலும், ஜவ்வு பாதிப்பால் வலி ஏற்படும். திடீரென மயக்கம் வரும்; கால்கள் செயல் இழக்கும் அபாயமும் உள்ளது.

2. அதிக பாரம் தூக்குவது காரணமா?
அதிக எடை தூக்குவோர், மூட்டை தூக்குவோருக்கு, இந்த பாதிப்பு வரும். நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வோர் மட்டுமின்றி, ஷேர் ஆட்டோக்களில் நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும், முதுகு வலி வரும். ஷேர் ஆட்டோக்களில், அதிர்வைத் தாங்கும், 'ஷாக்-அப்சர்வர்' இல்லாததால், வாகனம் அதிர்ந்து, முதுகுத் தண்டுவடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

3. கம்ப்யூட்டரே கதி என கிடப்போருக்கு முதுகு வலி வருமா?
கம்ப்யூட்டர் முன், மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பதால், தண்டு வடத்தை தாங்கிப் பிடிக்கும் தசைகள், பலவீனம் அடையும். இதன் காரணமாக, எலும்பு, நரம்பும் பாதிக்கப்பட்டு, முதுகு வலி வரும். நீண்ட நேரம், கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர், இடைஇடையே, சற்று ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது.

4. முதியவர்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றனரே?
வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது இயல்பு தான்; 35 வயது ஆனாலே, எலும்பு தேய்மானம் வந்து விடுவதால், வயது ஆக ஆக, முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கழுத்தை ஒரே பக்கமாக திருப்பி வைத்தல், நீண்ட நேரம் ஒரே பொருளை உற்றுப் பார்த்தல் போன்றவற்றால், கழுத்து வலியும் ஏற்படலாம்.

5. சிறு வயதில் பலருக்கு முதுகு வலி வருகிறதே...?
அழகு குறைந்துவிடும் என, பெண்கள், குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுக்காவிட்டால், குழந்தைகளுக்கு, இது போன்று சிறு வயதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், அளவுக்கு அதிகமாக புத்தகங்களை சுமந்து செல்கின்றனர். நீண்ட தூரம் புத்தகப் பை சுமந்தால், கழுத்து வலியும், முதுகு வலியும் வரும்.

6. உணவு முறையால் பிரச்னை தீருமா?
சோயா பீன்ஸ், ஆப்பிள், திராட்சை, பப்பாளி மற்றும் இறால் போன்றவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்வது, எலும்புகளுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். கார்களில் நீண்ட தூர பயணம் செய்வோர், இடுப்பில், 'பெல்ட்' அணிவது நல்லது.

7. தலையணைக்கும், முதுகு வலி, கழுத்து வலிக்கும் தொடர்பு உண்டா?
நிச்சயமாக. தலையணை என்பது, படுக்கும்போது, உடலுக்கும், தலைக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு ஏற்பத் தான் இருக்க வேண்டும். தலையணையை உயரமாக வைத்தல், இரண்டு, மூன்று தலையணைகளை அடுக்கி வைத்துப் படுப்பது ஆகியவை, ஆபத்தானவை. தலையணைக்கு பதில், கையை மடக்கி ஒரு பக்கமாக படுத்தலும், பாதிப்பை ஏற்படுத்தும். காலுக்கு தலையணை வைப்பது சரியல்ல. ஆழ்ந்த தூக்கத்தில் தரை நார்கள் தளர்ந்து, நரம்பு பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

8. சூரிய ஒளியில் நிற்க வேண்டும் என்பது சரியா?
சூரிய உதயம், சூரிய அஸ்தமன (காலை, மாலை) நேரங்களில், உடலில் சூரிய ஒளி படும்படி நிற்பது நல்லது. இதன்மூலம் விட்டமின்-டி கிடைக்கும். இதனால், உடல் பலகீனம் குறையும். பால் குடித்தால் உடம்பு குண்டாகும் என, பலர் பால் குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். இது சரியான நடைமுறை அல்ல. இதனால் வேறு விதமான பாதிப்புகள் வரும்.

9. விளையாட்டு வீரர்கள் என்ன செய்யலாம்?
விளையாட்டு வீரர்கள், கடும் உடற்பயிற்சிக்கு நேரடியாக செல்லாமல், கை, கால் இணைப்புகளை அசைத்து, எளிய பயிற்சி செய்வது அவசியம். அதாவது, 'வார்ம் அப்' செய்து கொண்டு, தசை நார்கள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ப தயாரான பின், கடும் பயிற்சிகளில் ஈடுபடலாம். இதனால், தசைப்பிடிப்புகள் ஏற்படாது; முதுகு வலியும் வராது தடுக்கலாம். எல்லாரும் எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்வது அவசியம்

.

டாக்டர் பி.பாலகிருஷ்ணன், 
எலும்பு சிகிச்சை நிபுணர்,
சென்னை ஸ்டான்லி ம
ருத்துவமனை.


(தினமலர் :ஹலோ டாக்டர் ..! செய்தி)


2 comments: