Friday, November 29, 2013

மனஅழுத்ததைப்(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள்




இன்றைய சுறுசுறுப்பான வேலை
ப்
  பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம்  தவிர்க்க இயலாத ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது.


நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை
க் கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விடயமாக மட்டுமில்லாமல் அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.


அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை
க்
 குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுதுபோக்குகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.


புத்தகம் படிப்பது


புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை
ப் படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


யோகாசனம்


தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெறும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும்.

இசையை
க் கேட்பது



கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை
 க் கேட்டு மகிழ்வதே இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விடயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.


தோட்டக்கலை



தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.

சமைப்பது


சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை
க் குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படிச் சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.


எழுதுவது




மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணனி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும். இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை
 ச் சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்.

Friday, November 22, 2013

திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம்

மனிதன் தன் இனத்தொடு கூடி வாழக் கற்றுக் கொண்ட காலத்தில் உண்டான மாற்றங்கள், வளர்ச்சிகள், ஒற்றுமைகள், முரண்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவறை ஒருங்கிணைந்து மனித இனப்பண்பைக் கூறுவது சமூகம் என்பர். பண்டை வாழ்வியல் கருத்துகள், பழக்கவழக்கங்கள், பயன்கள், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், ஆக்கத்திற்கும் சான்றுகளாக இருந்தன. பல இல்லங்கள் இணைந்ததே சமூகம். முதலில் இல்லறத்தில் அறத்தை வளர்த்துப்பின் அதைச் சமூகம் முழுவதும் பரவச்செய்தல் என எண்ணிய வள்ளுவர் அறத்துப்பாலில் முதற்கண் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு என இல்லத்தில் உறுப்பினருக்கு இருக்க வேண்டிய நல்லுறவைக் கூறும் அதிகாரங்களை அமைத்துள்ளார். காமத்துப்பாலிலும் இல்லறத்தின் உறவுகளும் உணர்வுகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

சமூகம்
சமூகம், சமுதயம், சமுதாயம், சமூகம் என்ற நான்கு சொற்களுக்குத் தமிழ் லெக்சிகன் தமிழ் அகராதியில் கூட்டம் அல்லது திரள் என்று பொருள் உள்ளது. சமூகம் என்பதற்கு ஒரு சாதி அல்லது ஒரு இனத்தார் என்று பொருள் கொள்கின்றனர். இந்த ஆய்வு சமூகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தின் பொதுவான சிந்தனையை வெளிப்படுத்த முற்படுகிறது.
இல்லறம்
இல் + அறம் = இல்லறம் என்ற சொல் அமைப்பானது வீட்டிலிருந்து அறவாழ்க்கையை மேற்கொள்வதாகும். இதனைச் சமூகவியலார் "குடும்பம்" என்ற சொல்லின் மூலம் விளக்குவர். திரு.வி.க. "இல்லறம்" என்ற சொல்லுக்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார். "அறம் என்பது ஒரு மரம் போன்றது. திருமணம், பிள்ளைப்பேறு, அன்பு, விருந்தோம்பல், ஒழுக்கம், பொறை, ஒப்புரவு, ஈகை, அருள், தவம், வாய்மை, துறவு, மெய்யுணர்வு முதலான அம்மரத்தின் உறுப்புகளாகிய வேர், பட்டை, சுவடு, கோடு, விளார், தளிர், இலை, மலர், காய், கனி முதலியன போன்றன. இவ்வறக்கூறுகள் யாவும், பிறந்து வளர்ந்து பயனளிக்க வேண்டிய தாயகம் இல்லறமாகும்" என விளக்குகிறார். மேற்கூறிய கருத்தைக் கொண்டு இல்லறம் என்பது ஒத்த ஒழுக்கமுடைய கணவன், மனைவியாகிய இருவரும் ஒருவருக்கொருவர் தம் வாழ்க்கையில் இன்பதுன்பங்களைப் பங்கிட்டுத் தம் சந்ததிகளான குழந்தைச் செல்வத்தைப் பேணிக்காத்து கணவன், மனைவி, குழந்தை, மூவரும் சமூகக் கடமையைப் பின்பற்றுவது இல்லறம் ஆகும்.
இல்லற வாழ்க்கை
திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்துவது இன்பத்திற்காக மட்டும் அன்று, அறத்திற்காகவுமே. இன்பம் விலக்கப்படுவதன்றெனினும் அறம் மறக்கத்தக்கதும் அன்று. இரண்டும் இணைந்ததே இல்லற வாழ்க்கையாகும். இல்லறத்தோர் பலருக்குத் துணையாக நின்று உதவுதற்குரியவர் என்பதை இல்வாழ்க்கையின் முதலிரு குறள்கள் காட்டும்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
 - - - (குறள் 41)
இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவன், இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், ஆகிய மூவர்க்கும் சிறந்த துணையாக இருப்பவனாவான்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
 - - - (குறள் 42)
துறந்தவர்களுக்கும், வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக இருக்கக் கூடியவன். மேற்கூறப்பட்டுள்ள ஒவ்வொரு குறளிலும் மூவகையினர் குறிப்பிடப்படுகின்றனர். முதற்குறளில் இயல்புடைய மூவர் என வள்ளுவர் தொகை, வகையாக மூவரைக் குறிப்பிட்டார். அடுத்த குறளில் துறந்தார், துவ்வாதார், இறந்தாரெனப் பறி மூவகையினரைக் கூறினர். இவ்விரு குறள்களுக்குமே பலவாறு பொருள் கூறப்படுகிறது.
இனி, துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்பன யாரைக் குறிப்பன என வெவ்வேறு பொருள்கள் கூறப்படுகின்றன. காலத்திற்கேற்றவாறு உரையாசிரியர்கள் வேறுபட்டுக் கூறியுள்ளனர். துறந்தார், என்பதற்குப் பொதுவாக இருவிதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது. துறந்தோர் துறவியரே என்பதொன்று. களை கண்ணானவரால் துறக்கப்பட்டோர் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மிக்க வறுமையினாலோ குருடு, செவிடு, முடம் முதலான உடற்குறைகளினாலோ, நோயினாலோ, அறிவுக் குறையினாலோ பொருள் தேடவும் வாழ்க்கையின் வளங்களை நுகரவும் இயலாத நிலையிலுள்ளோரை துவ்வாதார் ஆவர்.
இறந்தார் என்பதற்கு மரித்தோர் எனவும் இல்வாழ்க்கை வாய்ப்புகளை இழந்தோர் எனவும் பொருள் கூறப்படுகிறது. மரித்தோர்க்குரிய கடன்களைச் செய்தலும் இல்வாழ்க்கை வாய்ப்புகளை இழந்தோர்க்கு உதவுதலும் கூட இல்லறத்தாரின் கடனாகும். துறவியர்க்கு வேண்டுவனவற்றை அளித்து ஆதரித்தலும் இல்வாழ்வோர் கடமை என்பது வள்ளுவர் கருத்து. இக்கருத்து பல இடங்களில் கூறப்படுகிறது.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
 - - - (குறள் 263)
இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவிகளுக்கு உணவு முதலான கொடுத்து உதவவேண்டித் தவம் செய்வதை மறந்து விட்டார்கள் என்று வலியுறுத்தி தவம் என்னும் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். துறவறவியலுள்ளும் உரையாசிரியர்கள் சிலர் துறவியரை இயல்புடைய மூவரில் ஒருவர் எனவும் சிலர் 342வது குறளில் குறிப்பிடப்படும் துறந்தோர் எனவும் கொண்டனரேயன்றித் துறவியரை ஆதரித்தல் இல்லறத்தோர் கடன் என்பது அனைவருக்கும் உடன்பாடாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களும் துறவியரை வரவேற்று உணவளித்துப் போற்றுதலை ஒரு சிறந்த அறமாகப் போற்றுகின்றன. இதனை,
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை
 - - - (சிலம்பு 16. 71-73)
என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது. துறவோர்க்கெதிர்தல் இங்குக் குறிப்பிடப்படும் நான்கு அறங்களில் ஒன்றாகும்.
"மணிமேகலை காவியத்தலைவி சென்ற பிறவியில் சாதுக்கரன் என்னும் துறவியை வரவேற்று உணவளித்துப் பின் இறக்கும்போத அச்செயலை நினைத்த நல்வினையின் பயனாகவே அப்பிறவியில் பலருக்கு உணவளிக்கத் தக்கதாக அமுதசுரபியைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது. துறவியரை உபசரித்தல் அக்காலத்துச் சிறந்த அறமாகப் பலராலும் கருதப்பட்டது. சங்ககாலப் புலவர்கள் துறவோரை வரவேற்று வணங்குமாறு அரசர்க்கு அறிவுரை கூறியுள்ளதைப் புறநானூறு,
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
 - - - (புறம் 619-20)
என விளக்குகிறது. இவ்வாறு அக்காலத்தில் பரவியிருந்த கருத்தையொட்டியே வள்ளுவரும் துறவோரை உபசரித்தல் இல்லறத்தோர்களின் கடமைகளில் ஒன்று" என வலியுறுத்தியுள்ளார்.
இல்லறத் தன்மை
இல்லற வாழ்க்கை என்றாலே தலைமைப் பண்பு கணவனாகிய தலைவனுக்கே உரியதாக உள்ளது. ஆனால் வள்ளுவத்தில் இல்லறம் நடத்தும் முழுமைப் பங்கு யாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வுக்குரியது. "இல்வாழ்க்கை" அதிகாரத்தில் ஆண்களுக்கே முதன்மையிடம் கொடுப்பதைப் போலத் தோன்றும். குடும்பத்தார் கடமை பொருளீட்டல்.
பெண்ணுக்குரிய கடமை வருவாய்க்குத் தகுந்தவாறு குடும்பத்தை நடத்துதல் இருவருக்குமான பொதுக்கடமை தம்மக்களை உரிய வழியில் வளர்த்தல். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்தும் போது, இருவருக்கும் சமமாகவே விரித்துறைக்கிறார். சான்றாக இல்லத்தலைவியும், தலைவனும் இணைந்துதான் விருந்தினர்களை உபசரிக்க இயலும் என்ற மரபை, கடமையாகக் குறிப்பிடலாம். அதுபோலத்தான், குடும்பத் தலைவியும் தலைவனும் இணைந்து தெய்வத்தை வணங்குதல், குடும்பத் தலைவலி கணவனை வணங்கும் இயல்புடையவளாக இருப்பதால், அவன் தலைவனுக்குத் தாழ்ந்தவளாகக் கருதப்பட மாட்டாளா என்ற வினா எழுவது இயல்பாகும். வள்ளுவத்தில் இடம்பெறும் குடும்பத்தலைவி தன்னுடைய கணவனின் உயர்வால்தான் தன் குடும்பத்திற்குச் சிறப்பு உண்டாகிறது என எண்ணுகிறாள். அவ்வுயர்ந்த எண்ணமே, கணவனைத் தன்னிலும் உயர்ந்தவனாக அவளை எண்ணச் செய்கிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே தாழ்ந்து விளங்குதலாக மாறுகிறது. வள்ளுவர்க்குக் குடும்பத் தலைவியைத் தலைவனை விடத் தாழ்ந்தவள் என்று சுட்டுவது நோக்கமில்லை. இருவருக்கும், குடும்பத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும் என்பதே அவரின் கருத்தாகும். வள்ளுவர் குடும்பக் கடமைகளைப் பொதுவாய்ச் சுட்டுகிறார். சில கடமைகள் இருவரும் தனித்துச் செய்ய வேண்டியதாகும். அவற்றை மட்டும் பிரித்துக் குறிப்பிடுகின்றார்.
குடும்பத் தலைவிக்குத் தன்னையும், தன் கற்பையும் காத்துக் கொண்டு தன் கணவனையும் தம் மக்களையும் காத்தல் இன்றியமையாதது. பொது இடங்களில் கணவனை ஏறுபோல் பீடுநடை உடையவனாக நடக்கச் செய்கிறாள். காரணம், குடும்பத்தைச் செம்மையுற நடத்துவதால், மற்றவர்களின் முன்னிலையில் சிறப்பைப் பெறுகிறான் குடும்பத்தலைவன். இத்தகு சிறப்புப் பொருந்திய குடும்பத் தலைவியே குடும்பம் சிறக்கத் துணையாக இருப்பாள். அவள் எல்லாக் கடமைகளிலும், அறநெறிகளிலும், கணவனுக்கு எப்போதும் துணையாக இருப்பதினால்தான் "வாழ்க்கைத் துணைநலம்" என ஓரதிகாரம் வகுத்து அதில் வாழ்க்கைத் துணையின் சிறப்பினை வலியுறுத்துகிறார்.
மக்கள் பேறு
பெற்றோர் தம்மக்களையே பெரும் பொருளாய்க் கருதுதல் வேண்டும். இல்லங்கள்தோறும் குழந்தைகள் செல்வமாய்க் கருதப்படவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தாகும். பச்சிளங் குழந்தைகளால் பெற்றோர் பெறும் இன்பத்தை அவர் மக்கட்பேறு என்னும் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கீழே காணலாம்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்
 - - - (குறள் 64)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
 - - - (குறள் 65)
குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
 - - - (குறள் 66)
சிறுகுழந்தை கையில் தொட்டளைந்த உணவு கூழேயாயினும் பெற்றோர்க்கு அது அமுதத்தைவிட இனியதாய் இருக்கும். குழந்தைகளை அணைத்தல் அல்லது குழந்தைகள் வந்து தம்மேலணைதல் பெற்றோர்களுக்கு உடற்கின்பமாகும். குழந்தைகளின் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாகும். தம்மக்களின் மழலைச்சொல் கேளாதவரே குழலோசை இனிமையுடையதாயிருக்கிறது. யாழோசை இனிமையுடையதாயிருக்கிறது என உணர்கின்றனர்

. "இவ்வாறு புனைந்துரைத்த வள்ளுவர் பெற்றோர் குழந்தைகளை எத்தகைய அன்புடன் பேணி வளர்த்தல் வேண்டுமென எதிர்பார்ப்பார் என்பதை ஊகிக்கலாம். மேலும் பெற்றோர் தாமே குழந்தைகளைத் தூக்கியும் உணவூட்டியும் மொழி பயிற்றியும் வளர்ப்பதையே விரும்புவார். குழந்தைகளைப் பெரும்பாலும் தாதியர் அல்லது பணியாட்கள் பொறுப்பில் விடுவதை விரும்பமாட்டார் எனலாம்.
இளங்குழந்தைகளினால் பெற்றோர் அடையும் இன்பத்தைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுதலும் குழந்தைகளைச் செல்வமாய்ப் போற்றுதலும் பண்டைக் காலத்தில் எங்கும் பரவியிருந்த இயல்பேயாகும். புறநானூற்றில் பாண்டியன் அறிவுடைய நம்பியும் பலவகை வளத்தையுடையோராய், நாட்டிலுள்ள பலருடன் உண்ணும் செல்வர்கட்கும் இடையே குறுகுறுவென நடந்து வந்து, கையை நீட்டி, நெய்யுடைய உணவினை, இட்டும், தொட்டும், கல்வியும், துழந்தும் மெய்பட விதிர்த்தும் உள்ளத்தை மயக்கும் மக்கட்செல்வம் இல்லாவிடின் அவர் தம் வாழ்நாளிற் பயனில்லையெனப் பாடினான் (புறம் 188). "குழவிதளர் நடைகாண்டலினிதே" அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே" என்றெல்லாம் குழந்தைச் செல்வத்தை இனியவை நாற்பது என்னும் பதினெண்கீழ் கணக்கு நூல் குறிப்பிடுகிறது.
பெற்றோர் இளங்குழந்தைகளை மிகவும் பாராட்டி அன்புடன் வளர்த்தல் இயல்பு என வள்ளுவர் எண்ணினார். அத்துடன் அவர்களை நல்லறிவுடையவராகக் கல்வியில் சிறந்தவராக, நற்பண்புகள் வாய்ந்தவராக வளர்த்தல் வேண்டுமென்று எதிர்பார்த்துக் குறளில் வரும் நன்மக்கட் பேறு, அறிவார்ந்த மக்கட்பேறு, "பண்புடைய மக்கள்" என்ற தொடர்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இல்லறத்தின் சிறப்புகள்
காமத்துப்பாலில் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் வள்ளுவர் அதே பகுதியிலேயே குடும்ப வாழ்க்கையைச் சேர்த்துக் கூறுவதை விட்டுத் தனியாக அறத்துப்பாலில் இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதற்கு விளக்கமாகத் "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" எனும் நூலில் "காமத்துப்பாலில் காதலர் ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்து வாழும் வாழ்க்கையைக் காண்கிறோம். ஆனால், அறத்துப்பாலின் இல்வாழ்க்கையில் காண்பது வேறு. காதலர் இருவரும் தம்மை மறந்து பிறரிடத்தில் செலுத்தும் அன்பு ஆண், பெண் இருவரின் இருவேறு மனங்கள் ஒன்று மற்றொன்றில் கரைந்துபோகும் தன்மையைக் காமத்துப்பால் கூறுகிறது. கணவனும் மனைவியுமாகிய இருவர் ஒரு மனம் உடையவராய் உலக நன்மை கருதி வாழும் தன்மையை இல்லறம் காட்டுகின்றது.
இல்லறம் நடத்தும் கணவனும், மனைவியுமாகிய இருவரும் ஒத்த மனம் உடையவர். ஆகையால் இன்பதுன்ப உணர்வுகளையும் மற்ற மனநிலைகளையும் மறைத்து வாழும் வாழ்க்கைக்கு இல்லறத்தில் இடமில்லை. ஒருவர் குறை மற்றொருவருக்கு நன்கு புலப்படும். ஆகையால், இன்னும் தெளிவாக மனநிலை விளங்க இடமுண்டு. மனம் வாழும் நிலையையும் அதற்குரிய அறநெறியையும் தனிவாழ்க்கை வாயிலாக விளக்க வந்த வள்ளுவர், முதலில் இல்வாழ்க்கையைக் குறிப்பிட்டு பிறகு சார்பானவற்றையும் விளக்கியுள்ளார்.
"அறத்துப்பாலில் இல்லறம், துறவறம் என்ற இருபெரும் பிரிவுகளில் அனைத்துச் சிறப்புகளையும் கூற விரும்புகிறார் முப்பாலார். இல்லறம் அமைப்பதற்கு முன்பு காதலர் மேற்கொள்ளும் களவு வாழ்க்கைக்கும் அறத்துப்பாலுக்கும் நேரடித் தொடர்பில்லை. இரண்டாவது, தலைவன், தலைவி இருவரிடையே அமையும் களவு, கற்பு ஆகியவை பற்றிக் கூறும்போது காமம் சுவையானதாகும். அவர்கள் துணையுடன் நிகழ்பனவற்றைப் பற்றிக் கூறும் பகுதியே இல்லறவியல். இதுவும், தலைவன்-தலைவிடையே உருவான கற்பு வாழ்வே எனினும், ஊடல், கூடல் முதலான இன்பச் சுவைகளை இப்பகுதியில் கூறுவதைத் தவிர்க்க வேண்டியே, காமம் தவிர்த்த பிறவற்றைப் பிற்பகுதி குறிப்பிடும். குடும்பம் என்ற அமைப்பின் அனைத்துச் செய்திகளையும் அறத்துப்பாலில் வள்ளுவர் கூறுகிறார். களவு வழிக்கற்பு வாழ்க்கை, நேரடிக் கற்புவாழ்க்கை எதுவாயினும் ஒரு குடும்பம் எவ்வாறு நடைபயில வேண்டுமென்பதை இல்லறவியல் பகுதி கூறுகிறது" எனவே, "குடும்பம்" பற்றிய இல்லறவியற் செய்திகள் பொதுவானவை என்று வலியுறுத்தியுள்ளார்.
முடிவு
திருவள்ளுவர் தந்த இல்லற அமைப்பில் ஈடுபடும் தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் இல்லை. பெண்ணைத் தாழ்மைப்படுத்திக் கூறவேண்டிய நோக்கமுமில்லை. எனவே குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் இருவரும் சமபங்கு உடையவர்களாகவே கருதப்படுகின்றனர். தாயின் அரவணைப்பால் மழலைச் செல்வங்களைப் பேணிக் காப்பது சாலச் சிறந்தது என்று குழந்தை வளர்ப்புப் பற்றி வலியுறுத்தியும், இல்லறத்தாருடைய கடமைகளையும் உள்ளத்துணர்வுகளையும் சமூக நோக்கில் நுணுகி ஆய்ந்துள்ளார் என்பது இவ்வாய்வுக் கட்டுரைமூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
1. திரு.வி.கலியாணசுந்தரம், பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை, சென்னை 1975, ப. 203.
2. காமாட்சி சீனிவாசன், குறள் கூறும் சமுதாயம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1975, ப. 60.
3. மேலது ப. 79.
4. மு. வரதராசன், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பாரிநிலையம், சென்னை, 1959, பக். 315-316.
5. தாமரைச்செல்வி, திருக்குறள் காட்டும் தமிழர் சமு‘யம், செயராம் பதிப்பகம், புதுச்சேரி, 2001, ப. 59.

ன்றி:
திரு. கா. காந்தி
தமிழ்த்துறை
கிராமியப் பல்கலைக்கழகம்
காந்தி கிராமம் - 624 302
திண்டுக்கல் மாவட்டம்
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

Wednesday, November 20, 2013

சச்சின் டெண்டுல்கர்-இந்திய கிரிக்கெட்டின் இமயம்


பெயர்: சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

பிறப்பு: ஏப்., 24, 1973

இடம்: மும்பை, மகாராஷ்டிரா

வயது: 40

உயரம்: 5 அடி, 5 அங்குலம்

இந்திய கிரிக்கெட்டின் இமயம் என போற்றப்படும் சச்சின், சுமார் 24 ஆண்டுகளாக மகத்தான பேட்ஸ்மேனாக பிரகாசித்தார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள், அனைத்து கிரிக்கெட்டிலும் சேர்த்து 50 ஆயிரம் ரன்கள் என சாதனை சிகரமாக விளங்கினார். மிக நீ...ண்ட காலமாக இந்திய ரசிகர்களின் இதயத் துடிப்பாக இருந்த இவரது ஓய்வு நிச்சயமாக மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.

மும்பை-யில் கடந்த 1973ல் பிறந்த சச்சின், இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது அண்ணன் அஜித் கொடுத்த ஊக்கத்தில் தளராமல் பயிற்சியில் ஈடுபட்டார். ஷிரத்தாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்த போது தனது குரு ராம்காந்த் ஆச்ரேக்க-ரிடம் கிரிக்கெட் நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். 1988ல் நடந்த பள்ளிகளுக்கு இடையி-லான போட்டியில் சக நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து சாதனை பயணத்தை துவக்கினார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.

முதல் சோதனை
தனது 16வது வயதில் 1989, நவ.,15ல் கராச்சி-யில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். முதல் போட்டியே சோதனையானதாக அமைந்தது. வக்கார் யூனிஸ் வீசிய பந்து இவரது முகத்தை பதம் பார்க்க... ரத்தம் வழிந்தது. இன்னொரு பக்கம் வாசிம் அக்ரமும் போட்டுத் தாக்கினார். முதல் இன்னிங்சில் வக்கார் வீசிய "யார்க்க-ரில்' வெறும் 15 ரன்க-ளுக்கு போல்டானார். இத்தொடர் முடிந்ததும், ""-அக்ரம் அசுர வேகத்தில் பந்துவீசுகிறார். சில சமயங்-ளில் தொடர்ந்து நான்கு பவுன்சர்கள் வீசுகிறார். இதை சமாளிப்பது ரொம்ப கடினமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் இனி விளைடுவது பற்றி யோசித்து வருகிறேன், '' என்று சச்சின் பரிதாபமாக கூறினாராம். இந்த சோதனையில் இருந்து மிக விரைவாக மீண்ட இவர் தனது 17வது வயதில் இங்கி-லாந்துக்கு எதிராக முதல் சதம் கடந்தார். தொடர்ந்து "மாஸ்டர் பேட்ஸ்மே-க' பிரகாசித்து, டெஸ்டில் அதிக சதம், அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார்.

"கிரிக்கெட் கடவுள்':

பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் இவரை தான் இந்திய அணி பெரி-தும் நம்பியிருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் "ஹீரோவாக ஜொலித்தார். "இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால்; சச்சின் தான் கவுள்' என்று பேசப்படும் அளவுக்கு புகழின் உச்சியை தொட்டார். சிறுவர்களை பெரிதும் கவர்ந்ததால் இவரது பெய-ரில் "காமிக்ஸ்' புத்தகங்கள் கூட எழுதப்பட்டன. விளம்பரதாரர்களின் விருப்ப நாயகனாக இருந்ததால், உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக மாறினார்.

கடந்த 24 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் அசைக்க முடியாத வீரராக உலா வந்த சச்சின், தனது சொந்த ஊரான மும்பையில் 200வது டெஸ்ட் போட்டியுடன் பிரியாவிடைபெற்றார்.

சச்சினுக்கு பாரத ரத்னா :கிரிக்கெட் சேவைக்கு கவுரவம்


நாட்டின் மிக உயர்ந்த "பாரத ரத்னா' விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக விளையாடி வந்த இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தவர்.

இவருக்கு "பாரத ரத்னா' விருது தரவேண்டும் என, கோரிக்கை கடந்த 2011ல் எழுந்தது. கடந்த 1954 முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருது, விளையாட்டு தவிர, கலை, இலக்கியம், அரசியல் மற்றும் பொதுத் துறைகளில் சாதித்தவர்களுக்கு மட்டும் தரப்படும்.

விதிகளில் மாற்றம்:
ஆனால், சச்சினுக்காக விளையாட்டு வீரர்களும், இவ்விருதை பெறும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும் என, அப்போதைய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தார். இதனால், "பாரத ரத்னா' விருது பெறுபவர்களுடைய தகுதியில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு, கடந்த 2011, டிசம்பர் மாதம் முன்வந்தது.

சச்சினுக்கு முன்:
இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்ற ஹாக்கி வீரர், மறைந்த தியான்சந்த்துக்கு முதலில் பாரத ரத்னா விருது தர வேண்டும் என, ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக 82 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது.

பலத்த போட்டி:
ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் (2008, பீஜிங்) வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு முதலில் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் "பாரத ரத்னா' விருது கேட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு மொத்தம் 64 விண்ணப்பங்கள் வந்தன. இதனால், 2011, 2012ல் இவ்விருது யாருக்கும் தரப்படவில்லை.

இதனிடையே, கடந்த ஜூலையில் மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திரா சிங், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,"சச்சினுக்கு முன், ஹாக்கி வீரர் தியான்சந்த்துக்கு, "பாரத ரத்னா' தரவேண்டும்,' என, தெரிவித்தார்.

இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான் உள்ளிட்ட பலர், சச்சினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமீபத்தில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" சச்சின் ஓய்வு பெற்றவுடன், "பாரத ரத்னா' விருது வழங்கப்படும்,'' என்றார். சச்சின் பெயரை , பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்தார்.

சச்சின் விடைபெற்ற சிறிது நேரத்தில், "பாரத ரத்னா' விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, விளையாட்டு உலகில் இருந்து இவ்விருது பெறும் முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுகிறார். பேராசிரியர் சி.என்.ஆர். ராவிற்கும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட உள்ளது.

அம்மாவுக்கு அர்ப்பணம்
"பாரத ரத்னா' விருதை, தனது அம்மாவுக்கு அர்ப்பணம் செய்த சச்சின் கூறுகையில்,"" பாரத ரத்னா விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இவ்விருதை எனது அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்,'' என்றார்.

சச்சின் பெற்ற விருதுகள்
சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைத்தார். இவர் பெற்ற முக்கிய விருதுகள்.
ஆண்டு விருது
1994 அர்ஜுனா
1998 ராஜிவ் கேல் ரத்னா
1999 பத்மஸ்ரீ
2008 பத்ம விபூஷண்
2010 குரூப் கேப்டன் (இந்திய விமானப்படை)
2012 "ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா'
* 2012 ல் காங்., சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ன்றி:தினமலர் 

Sunday, November 17, 2013

இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்


இன்றைய இளைஞர்கள்
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
திருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.
1. அன்புடைமை
2. பகுத்தறிதல்
3. வாய்மை
4. குற்றங்கடிதல்
5. வினைத் தூய்மை
6. கள்ளுண்ணாமை
7. வெகுளாமை
1. அன்புடைமை
அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.
அன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
 - - - (குறள். 72)
என்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு
 - - - (குறள். 80)
என்று குறிப்பிடுகிறார்.
உடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.
2. பகுத்தறிதல்
அறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
 - - - (குறள். 423)
என்றும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
 - - - (குறள். 355)
என்றும்,
சென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
 - - - (குறள். 422)
எச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.
3. வாய்மை
"வாய்மை" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
 - - - (குறள். 291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
 - - - (குறள். 292)
என்கிறார்.
அதாவது "வாய்மை" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.
இந்நிலையினைத்தான் வள்ளலார்,
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்
என்று கூறுகின்றார்.
எனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.
4. குற்றங்கடிதல்
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.
செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
 - - - (குறள். 433)
5. வினைத்தூய்மை
செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
 - - - (குறள். 656)
என்கிறார்.
அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.
6. கள்ளுண்ணாமை
இன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.
1. மதிப்பை இழந்து விடுவார்கள்.
2. பகைவரும் அஞ்சமாட்டார்கள்.
3. சான்றோரின் உறவும் போய்விடும்.
4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.
மேலும் அவர்,
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
 - - - (குறள். 923)
என்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
7. வெகுளாமை
வலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.
சினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
 - - - (குறள். 301)
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
 - - - (குறள். 302)
சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.
எனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நன்றி:
திரு. தா. டைட்டஸ் ஸ்மித்
அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி
சிவகாசி.
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

--