Friday, November 22, 2013

திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம்

மனிதன் தன் இனத்தொடு கூடி வாழக் கற்றுக் கொண்ட காலத்தில் உண்டான மாற்றங்கள், வளர்ச்சிகள், ஒற்றுமைகள், முரண்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவறை ஒருங்கிணைந்து மனித இனப்பண்பைக் கூறுவது சமூகம் என்பர். பண்டை வாழ்வியல் கருத்துகள், பழக்கவழக்கங்கள், பயன்கள், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், ஆக்கத்திற்கும் சான்றுகளாக இருந்தன. பல இல்லங்கள் இணைந்ததே சமூகம். முதலில் இல்லறத்தில் அறத்தை வளர்த்துப்பின் அதைச் சமூகம் முழுவதும் பரவச்செய்தல் என எண்ணிய வள்ளுவர் அறத்துப்பாலில் முதற்கண் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு என இல்லத்தில் உறுப்பினருக்கு இருக்க வேண்டிய நல்லுறவைக் கூறும் அதிகாரங்களை அமைத்துள்ளார். காமத்துப்பாலிலும் இல்லறத்தின் உறவுகளும் உணர்வுகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

சமூகம்
சமூகம், சமுதயம், சமுதாயம், சமூகம் என்ற நான்கு சொற்களுக்குத் தமிழ் லெக்சிகன் தமிழ் அகராதியில் கூட்டம் அல்லது திரள் என்று பொருள் உள்ளது. சமூகம் என்பதற்கு ஒரு சாதி அல்லது ஒரு இனத்தார் என்று பொருள் கொள்கின்றனர். இந்த ஆய்வு சமூகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தின் பொதுவான சிந்தனையை வெளிப்படுத்த முற்படுகிறது.
இல்லறம்
இல் + அறம் = இல்லறம் என்ற சொல் அமைப்பானது வீட்டிலிருந்து அறவாழ்க்கையை மேற்கொள்வதாகும். இதனைச் சமூகவியலார் "குடும்பம்" என்ற சொல்லின் மூலம் விளக்குவர். திரு.வி.க. "இல்லறம்" என்ற சொல்லுக்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார். "அறம் என்பது ஒரு மரம் போன்றது. திருமணம், பிள்ளைப்பேறு, அன்பு, விருந்தோம்பல், ஒழுக்கம், பொறை, ஒப்புரவு, ஈகை, அருள், தவம், வாய்மை, துறவு, மெய்யுணர்வு முதலான அம்மரத்தின் உறுப்புகளாகிய வேர், பட்டை, சுவடு, கோடு, விளார், தளிர், இலை, மலர், காய், கனி முதலியன போன்றன. இவ்வறக்கூறுகள் யாவும், பிறந்து வளர்ந்து பயனளிக்க வேண்டிய தாயகம் இல்லறமாகும்" என விளக்குகிறார். மேற்கூறிய கருத்தைக் கொண்டு இல்லறம் என்பது ஒத்த ஒழுக்கமுடைய கணவன், மனைவியாகிய இருவரும் ஒருவருக்கொருவர் தம் வாழ்க்கையில் இன்பதுன்பங்களைப் பங்கிட்டுத் தம் சந்ததிகளான குழந்தைச் செல்வத்தைப் பேணிக்காத்து கணவன், மனைவி, குழந்தை, மூவரும் சமூகக் கடமையைப் பின்பற்றுவது இல்லறம் ஆகும்.
இல்லற வாழ்க்கை
திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்துவது இன்பத்திற்காக மட்டும் அன்று, அறத்திற்காகவுமே. இன்பம் விலக்கப்படுவதன்றெனினும் அறம் மறக்கத்தக்கதும் அன்று. இரண்டும் இணைந்ததே இல்லற வாழ்க்கையாகும். இல்லறத்தோர் பலருக்குத் துணையாக நின்று உதவுதற்குரியவர் என்பதை இல்வாழ்க்கையின் முதலிரு குறள்கள் காட்டும்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
 - - - (குறள் 41)
இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவன், இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், ஆகிய மூவர்க்கும் சிறந்த துணையாக இருப்பவனாவான்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
 - - - (குறள் 42)
துறந்தவர்களுக்கும், வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக இருக்கக் கூடியவன். மேற்கூறப்பட்டுள்ள ஒவ்வொரு குறளிலும் மூவகையினர் குறிப்பிடப்படுகின்றனர். முதற்குறளில் இயல்புடைய மூவர் என வள்ளுவர் தொகை, வகையாக மூவரைக் குறிப்பிட்டார். அடுத்த குறளில் துறந்தார், துவ்வாதார், இறந்தாரெனப் பறி மூவகையினரைக் கூறினர். இவ்விரு குறள்களுக்குமே பலவாறு பொருள் கூறப்படுகிறது.
இனி, துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்பன யாரைக் குறிப்பன என வெவ்வேறு பொருள்கள் கூறப்படுகின்றன. காலத்திற்கேற்றவாறு உரையாசிரியர்கள் வேறுபட்டுக் கூறியுள்ளனர். துறந்தார், என்பதற்குப் பொதுவாக இருவிதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது. துறந்தோர் துறவியரே என்பதொன்று. களை கண்ணானவரால் துறக்கப்பட்டோர் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மிக்க வறுமையினாலோ குருடு, செவிடு, முடம் முதலான உடற்குறைகளினாலோ, நோயினாலோ, அறிவுக் குறையினாலோ பொருள் தேடவும் வாழ்க்கையின் வளங்களை நுகரவும் இயலாத நிலையிலுள்ளோரை துவ்வாதார் ஆவர்.
இறந்தார் என்பதற்கு மரித்தோர் எனவும் இல்வாழ்க்கை வாய்ப்புகளை இழந்தோர் எனவும் பொருள் கூறப்படுகிறது. மரித்தோர்க்குரிய கடன்களைச் செய்தலும் இல்வாழ்க்கை வாய்ப்புகளை இழந்தோர்க்கு உதவுதலும் கூட இல்லறத்தாரின் கடனாகும். துறவியர்க்கு வேண்டுவனவற்றை அளித்து ஆதரித்தலும் இல்வாழ்வோர் கடமை என்பது வள்ளுவர் கருத்து. இக்கருத்து பல இடங்களில் கூறப்படுகிறது.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
 - - - (குறள் 263)
இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவிகளுக்கு உணவு முதலான கொடுத்து உதவவேண்டித் தவம் செய்வதை மறந்து விட்டார்கள் என்று வலியுறுத்தி தவம் என்னும் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். துறவறவியலுள்ளும் உரையாசிரியர்கள் சிலர் துறவியரை இயல்புடைய மூவரில் ஒருவர் எனவும் சிலர் 342வது குறளில் குறிப்பிடப்படும் துறந்தோர் எனவும் கொண்டனரேயன்றித் துறவியரை ஆதரித்தல் இல்லறத்தோர் கடன் என்பது அனைவருக்கும் உடன்பாடாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களும் துறவியரை வரவேற்று உணவளித்துப் போற்றுதலை ஒரு சிறந்த அறமாகப் போற்றுகின்றன. இதனை,
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை
 - - - (சிலம்பு 16. 71-73)
என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது. துறவோர்க்கெதிர்தல் இங்குக் குறிப்பிடப்படும் நான்கு அறங்களில் ஒன்றாகும்.
"மணிமேகலை காவியத்தலைவி சென்ற பிறவியில் சாதுக்கரன் என்னும் துறவியை வரவேற்று உணவளித்துப் பின் இறக்கும்போத அச்செயலை நினைத்த நல்வினையின் பயனாகவே அப்பிறவியில் பலருக்கு உணவளிக்கத் தக்கதாக அமுதசுரபியைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது. துறவியரை உபசரித்தல் அக்காலத்துச் சிறந்த அறமாகப் பலராலும் கருதப்பட்டது. சங்ககாலப் புலவர்கள் துறவோரை வரவேற்று வணங்குமாறு அரசர்க்கு அறிவுரை கூறியுள்ளதைப் புறநானூறு,
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
 - - - (புறம் 619-20)
என விளக்குகிறது. இவ்வாறு அக்காலத்தில் பரவியிருந்த கருத்தையொட்டியே வள்ளுவரும் துறவோரை உபசரித்தல் இல்லறத்தோர்களின் கடமைகளில் ஒன்று" என வலியுறுத்தியுள்ளார்.
இல்லறத் தன்மை
இல்லற வாழ்க்கை என்றாலே தலைமைப் பண்பு கணவனாகிய தலைவனுக்கே உரியதாக உள்ளது. ஆனால் வள்ளுவத்தில் இல்லறம் நடத்தும் முழுமைப் பங்கு யாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வுக்குரியது. "இல்வாழ்க்கை" அதிகாரத்தில் ஆண்களுக்கே முதன்மையிடம் கொடுப்பதைப் போலத் தோன்றும். குடும்பத்தார் கடமை பொருளீட்டல்.
பெண்ணுக்குரிய கடமை வருவாய்க்குத் தகுந்தவாறு குடும்பத்தை நடத்துதல் இருவருக்குமான பொதுக்கடமை தம்மக்களை உரிய வழியில் வளர்த்தல். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்தும் போது, இருவருக்கும் சமமாகவே விரித்துறைக்கிறார். சான்றாக இல்லத்தலைவியும், தலைவனும் இணைந்துதான் விருந்தினர்களை உபசரிக்க இயலும் என்ற மரபை, கடமையாகக் குறிப்பிடலாம். அதுபோலத்தான், குடும்பத் தலைவியும் தலைவனும் இணைந்து தெய்வத்தை வணங்குதல், குடும்பத் தலைவலி கணவனை வணங்கும் இயல்புடையவளாக இருப்பதால், அவன் தலைவனுக்குத் தாழ்ந்தவளாகக் கருதப்பட மாட்டாளா என்ற வினா எழுவது இயல்பாகும். வள்ளுவத்தில் இடம்பெறும் குடும்பத்தலைவி தன்னுடைய கணவனின் உயர்வால்தான் தன் குடும்பத்திற்குச் சிறப்பு உண்டாகிறது என எண்ணுகிறாள். அவ்வுயர்ந்த எண்ணமே, கணவனைத் தன்னிலும் உயர்ந்தவனாக அவளை எண்ணச் செய்கிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே தாழ்ந்து விளங்குதலாக மாறுகிறது. வள்ளுவர்க்குக் குடும்பத் தலைவியைத் தலைவனை விடத் தாழ்ந்தவள் என்று சுட்டுவது நோக்கமில்லை. இருவருக்கும், குடும்பத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும் என்பதே அவரின் கருத்தாகும். வள்ளுவர் குடும்பக் கடமைகளைப் பொதுவாய்ச் சுட்டுகிறார். சில கடமைகள் இருவரும் தனித்துச் செய்ய வேண்டியதாகும். அவற்றை மட்டும் பிரித்துக் குறிப்பிடுகின்றார்.
குடும்பத் தலைவிக்குத் தன்னையும், தன் கற்பையும் காத்துக் கொண்டு தன் கணவனையும் தம் மக்களையும் காத்தல் இன்றியமையாதது. பொது இடங்களில் கணவனை ஏறுபோல் பீடுநடை உடையவனாக நடக்கச் செய்கிறாள். காரணம், குடும்பத்தைச் செம்மையுற நடத்துவதால், மற்றவர்களின் முன்னிலையில் சிறப்பைப் பெறுகிறான் குடும்பத்தலைவன். இத்தகு சிறப்புப் பொருந்திய குடும்பத் தலைவியே குடும்பம் சிறக்கத் துணையாக இருப்பாள். அவள் எல்லாக் கடமைகளிலும், அறநெறிகளிலும், கணவனுக்கு எப்போதும் துணையாக இருப்பதினால்தான் "வாழ்க்கைத் துணைநலம்" என ஓரதிகாரம் வகுத்து அதில் வாழ்க்கைத் துணையின் சிறப்பினை வலியுறுத்துகிறார்.
மக்கள் பேறு
பெற்றோர் தம்மக்களையே பெரும் பொருளாய்க் கருதுதல் வேண்டும். இல்லங்கள்தோறும் குழந்தைகள் செல்வமாய்க் கருதப்படவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தாகும். பச்சிளங் குழந்தைகளால் பெற்றோர் பெறும் இன்பத்தை அவர் மக்கட்பேறு என்னும் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கீழே காணலாம்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்
 - - - (குறள் 64)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
 - - - (குறள் 65)
குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
 - - - (குறள் 66)
சிறுகுழந்தை கையில் தொட்டளைந்த உணவு கூழேயாயினும் பெற்றோர்க்கு அது அமுதத்தைவிட இனியதாய் இருக்கும். குழந்தைகளை அணைத்தல் அல்லது குழந்தைகள் வந்து தம்மேலணைதல் பெற்றோர்களுக்கு உடற்கின்பமாகும். குழந்தைகளின் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாகும். தம்மக்களின் மழலைச்சொல் கேளாதவரே குழலோசை இனிமையுடையதாயிருக்கிறது. யாழோசை இனிமையுடையதாயிருக்கிறது என உணர்கின்றனர்

. "இவ்வாறு புனைந்துரைத்த வள்ளுவர் பெற்றோர் குழந்தைகளை எத்தகைய அன்புடன் பேணி வளர்த்தல் வேண்டுமென எதிர்பார்ப்பார் என்பதை ஊகிக்கலாம். மேலும் பெற்றோர் தாமே குழந்தைகளைத் தூக்கியும் உணவூட்டியும் மொழி பயிற்றியும் வளர்ப்பதையே விரும்புவார். குழந்தைகளைப் பெரும்பாலும் தாதியர் அல்லது பணியாட்கள் பொறுப்பில் விடுவதை விரும்பமாட்டார் எனலாம்.
இளங்குழந்தைகளினால் பெற்றோர் அடையும் இன்பத்தைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுதலும் குழந்தைகளைச் செல்வமாய்ப் போற்றுதலும் பண்டைக் காலத்தில் எங்கும் பரவியிருந்த இயல்பேயாகும். புறநானூற்றில் பாண்டியன் அறிவுடைய நம்பியும் பலவகை வளத்தையுடையோராய், நாட்டிலுள்ள பலருடன் உண்ணும் செல்வர்கட்கும் இடையே குறுகுறுவென நடந்து வந்து, கையை நீட்டி, நெய்யுடைய உணவினை, இட்டும், தொட்டும், கல்வியும், துழந்தும் மெய்பட விதிர்த்தும் உள்ளத்தை மயக்கும் மக்கட்செல்வம் இல்லாவிடின் அவர் தம் வாழ்நாளிற் பயனில்லையெனப் பாடினான் (புறம் 188). "குழவிதளர் நடைகாண்டலினிதே" அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே" என்றெல்லாம் குழந்தைச் செல்வத்தை இனியவை நாற்பது என்னும் பதினெண்கீழ் கணக்கு நூல் குறிப்பிடுகிறது.
பெற்றோர் இளங்குழந்தைகளை மிகவும் பாராட்டி அன்புடன் வளர்த்தல் இயல்பு என வள்ளுவர் எண்ணினார். அத்துடன் அவர்களை நல்லறிவுடையவராகக் கல்வியில் சிறந்தவராக, நற்பண்புகள் வாய்ந்தவராக வளர்த்தல் வேண்டுமென்று எதிர்பார்த்துக் குறளில் வரும் நன்மக்கட் பேறு, அறிவார்ந்த மக்கட்பேறு, "பண்புடைய மக்கள்" என்ற தொடர்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இல்லறத்தின் சிறப்புகள்
காமத்துப்பாலில் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் வள்ளுவர் அதே பகுதியிலேயே குடும்ப வாழ்க்கையைச் சேர்த்துக் கூறுவதை விட்டுத் தனியாக அறத்துப்பாலில் இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதற்கு விளக்கமாகத் "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" எனும் நூலில் "காமத்துப்பாலில் காதலர் ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்து வாழும் வாழ்க்கையைக் காண்கிறோம். ஆனால், அறத்துப்பாலின் இல்வாழ்க்கையில் காண்பது வேறு. காதலர் இருவரும் தம்மை மறந்து பிறரிடத்தில் செலுத்தும் அன்பு ஆண், பெண் இருவரின் இருவேறு மனங்கள் ஒன்று மற்றொன்றில் கரைந்துபோகும் தன்மையைக் காமத்துப்பால் கூறுகிறது. கணவனும் மனைவியுமாகிய இருவர் ஒரு மனம் உடையவராய் உலக நன்மை கருதி வாழும் தன்மையை இல்லறம் காட்டுகின்றது.
இல்லறம் நடத்தும் கணவனும், மனைவியுமாகிய இருவரும் ஒத்த மனம் உடையவர். ஆகையால் இன்பதுன்ப உணர்வுகளையும் மற்ற மனநிலைகளையும் மறைத்து வாழும் வாழ்க்கைக்கு இல்லறத்தில் இடமில்லை. ஒருவர் குறை மற்றொருவருக்கு நன்கு புலப்படும். ஆகையால், இன்னும் தெளிவாக மனநிலை விளங்க இடமுண்டு. மனம் வாழும் நிலையையும் அதற்குரிய அறநெறியையும் தனிவாழ்க்கை வாயிலாக விளக்க வந்த வள்ளுவர், முதலில் இல்வாழ்க்கையைக் குறிப்பிட்டு பிறகு சார்பானவற்றையும் விளக்கியுள்ளார்.
"அறத்துப்பாலில் இல்லறம், துறவறம் என்ற இருபெரும் பிரிவுகளில் அனைத்துச் சிறப்புகளையும் கூற விரும்புகிறார் முப்பாலார். இல்லறம் அமைப்பதற்கு முன்பு காதலர் மேற்கொள்ளும் களவு வாழ்க்கைக்கும் அறத்துப்பாலுக்கும் நேரடித் தொடர்பில்லை. இரண்டாவது, தலைவன், தலைவி இருவரிடையே அமையும் களவு, கற்பு ஆகியவை பற்றிக் கூறும்போது காமம் சுவையானதாகும். அவர்கள் துணையுடன் நிகழ்பனவற்றைப் பற்றிக் கூறும் பகுதியே இல்லறவியல். இதுவும், தலைவன்-தலைவிடையே உருவான கற்பு வாழ்வே எனினும், ஊடல், கூடல் முதலான இன்பச் சுவைகளை இப்பகுதியில் கூறுவதைத் தவிர்க்க வேண்டியே, காமம் தவிர்த்த பிறவற்றைப் பிற்பகுதி குறிப்பிடும். குடும்பம் என்ற அமைப்பின் அனைத்துச் செய்திகளையும் அறத்துப்பாலில் வள்ளுவர் கூறுகிறார். களவு வழிக்கற்பு வாழ்க்கை, நேரடிக் கற்புவாழ்க்கை எதுவாயினும் ஒரு குடும்பம் எவ்வாறு நடைபயில வேண்டுமென்பதை இல்லறவியல் பகுதி கூறுகிறது" எனவே, "குடும்பம்" பற்றிய இல்லறவியற் செய்திகள் பொதுவானவை என்று வலியுறுத்தியுள்ளார்.
முடிவு
திருவள்ளுவர் தந்த இல்லற அமைப்பில் ஈடுபடும் தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் இல்லை. பெண்ணைத் தாழ்மைப்படுத்திக் கூறவேண்டிய நோக்கமுமில்லை. எனவே குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் இருவரும் சமபங்கு உடையவர்களாகவே கருதப்படுகின்றனர். தாயின் அரவணைப்பால் மழலைச் செல்வங்களைப் பேணிக் காப்பது சாலச் சிறந்தது என்று குழந்தை வளர்ப்புப் பற்றி வலியுறுத்தியும், இல்லறத்தாருடைய கடமைகளையும் உள்ளத்துணர்வுகளையும் சமூக நோக்கில் நுணுகி ஆய்ந்துள்ளார் என்பது இவ்வாய்வுக் கட்டுரைமூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
1. திரு.வி.கலியாணசுந்தரம், பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை, சென்னை 1975, ப. 203.
2. காமாட்சி சீனிவாசன், குறள் கூறும் சமுதாயம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1975, ப. 60.
3. மேலது ப. 79.
4. மு. வரதராசன், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பாரிநிலையம், சென்னை, 1959, பக். 315-316.
5. தாமரைச்செல்வி, திருக்குறள் காட்டும் தமிழர் சமு‘யம், செயராம் பதிப்பகம், புதுச்சேரி, 2001, ப. 59.

ன்றி:
திரு. கா. காந்தி
தமிழ்த்துறை
கிராமியப் பல்கலைக்கழகம்
காந்தி கிராமம் - 624 302
திண்டுக்கல் மாவட்டம்
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

No comments:

Post a Comment