Friday, April 22, 2011

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்


பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், "கார்னியல்' பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்... இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே.

இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர்.

ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.


அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், "நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்... அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!' என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.

சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல... வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும்.

இதில் இலங்கை முன்னோடி...

மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்
.

No comments:

Post a Comment