Friday, April 22, 2011

மாறாமல் எத்தனையோ??



புற்றீசல் கூட்டம் போல் சென்னை மாநகரை
முற்றுகையிடும் மக்கள் கூட்டம்
கிராமத்தில் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும்
நகரத்தின் பகட்டில் மயங்கினர் இவர்கள்

ஏர் பிடித்து நிலத்தை உழுத கைகள்
தார் ரோடு போட்டு காய்ந்தன
நாற்று நடவு நட்ட பெண்டிரும்
சிற்றாள் வேலையில் சேர்ந்தனர்

இரவு பகல் இவர்கள் உழைத்தாலும்
வரவு கைகளில் மிக சொற்பம்

உணவு கொடுத்தவர்கள் வீதியிலே
உண்டு கொழுத்தவர்கள் மாடியிலே
கண்டு கொள்ளாதவர்கள் அரசியலிலே
வண்டு போல் ஊறுவது நம் தலையிலே

வீடில்லாமல் போனாலும் கிடைத்த
நடைமேடை யில் சோறாக்கி உண்டனர்
கிழிந்த பாய் போட்டு படுத்தனர்
விழி மூடி வருவதறியாமல் உறங்கினர்

விடிகாலை எல்லோருக்கும் விடியல்
வீதியோரமிருப்பவருக்கோ என்றுமே இருள்
விருந்தாளியாய் வந்து சேர்ந்தான் எமதர்மன்
விண்ணிற்கு கூட்டிச் செல்ல வாகனமாய்

வந்தவனிற்கு வரைமுறை தெரியவில்லை
வாசமான குழந்தை முதல் வயசான பெரிசுவரை
வாகாய் தன் வேலையை காட்டினான்
வக்கற்றவர்களின் உறுப்பும், உயிரும் பறந்தன.

பெரும் ஓலத்தில் அன்றைய இரவு
குருதியில் நனைந்த குற்றுயிர்கள்
குற்றம் புரிந்தவர் யாரென்று
புலன் விசாரணை புதியதாய்....

வாழ வழிதேடி வந்தவர்களுக்கு
வாய்க்கரிசி போட்டவர்களே
வசிக்க இடம் கொடுங்கள்
விழிகளை வழிகளாக்கிக் கொள்வார்கள்

இந்த நிலை மாறாதென்றால் - இதுபோன்ற
நொந்த நிலை ஏற்படத்தான் செய்யும்
நடைமேடை பிணமேடையாகத்தான் மாறும்
மாற்றம் நிறைந்த உலகில் மாறாமல் எத்தனையோ??

நட்புடன்
சாயி பாபா

1 comment:

  1. கிராமங்கள் எல்லாம் விவசாய நிலங்களை பட்டா போட்டு விற்றுத் தள்ளுகிறார்கள்... இன்னும் கொஞ்ச நாளில கிராமங்களும் சென்னை போலவே ஆகிடும்...

    ReplyDelete