Friday, April 22, 2011

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா

எங்கும் தூசுப்படலம்; தெருக்களில் வாரி இறைத்த குப்பை; ரோட்டில் வாகனங்களின் பேரிரைச்சல்; வாகன நெரிசலில் நீந்திக் கடக்க "ஹாரன் அடித்து' நொந்து போன மனம்...பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் எண்ணங்கள்... இவற்றிலிருந்து விடுதலை கிடைக்குமா...என ஏங்கி தவிப்பவரா... நீங்கள்?

வசதியும் வாய்ப்பும் கிடைத்தால், மலேசியாவை எட்டிப்பார்த்து விட்டு வாருங்கள்.


எங்கும் பசுமை; எதிலும் பசுமை; கண்களுக்கு குளுமை; தூசுகளுக்கு குட்பை. 99.9 சதவீதம், "நோ ஹாரன்'...நேர்த்தியான ரோடுகளில் விரைவாக செல்லும் லாவகம். பூலோகத்தின் சொர்க்கத்திற்கு வந்து விட்டோமோ என எண்ணத் தோன்றும் சில விநாடிகள்.


"சலாமத் டடாங்' என வரவேற்புடன், இனிமையான கனிவான மலேசிய ஏர்லைன்ஸ் விமான சேவை. விருந்தோம்பலை முன்னிறுத்தி, கனிவான பேச்சில் கவர்கிறது. விமான நிலையத்தை தொடும்போதே, பிரமாண்டத்தை கொட்டிக்காட்டுகிறது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம். 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமான சேவை செய்து வருகிறது. இன்னும் விரிவாக்கம் செய்து கொள்ள 10 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. எல்லா நாடுகளிலும் அடர்ந்த வனப்பகுதியில் விமான நிலையம் இருக்கும்.

ஆனால், இங்கோ விமான நிலையத்தில் வனத்தை உருவாக்கியுள்ளனர். நாடு முழுவதும் சுற்றி வாங்க நினைக்கும் பொருட்களை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம். விமான நிலையம் மட்டுமல்ல; பெரிய "ஷாப்பிங்' சென்டரே உள்ளது. நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள கடைகள் ஏராளம். சர்வதேச அளவில் எந்த உணவாக இருந்தாலும் அதுவும் விமான நிலையத்திலேயே கிடைக்கும். வந்து செல்லும் பயணிகளின் விரைவுக்கு ஏற்ப ஆங்காங்கே "லிப்ட்', தானியங்கி ஏணிப்படிகள் (எலிவேட்டர்) வசதிகள் உண்டு. புத்தம் புதியது போன்று எப்போதும் மின்னுகிறது விமான நிலையம்; அவ்வளவு சுத்தம்.மலேசியாவுக்குள் நுழைந்து விட்டாலே... பிரமாண்டங்களை காண முடியும்.

ரோட்டில் செல்லும்போதே இருபுறமும் பசுமையை கண்குளிர காணலாம். ரோடுகள் சுத்தமாகவும், நேராகவும், அகலமுள்ளதாகவும் உள்ளன.ரோட்டில் பயணிக்க ஆசையும் ஆர்வமும் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு வாகனங்களுக்கும் இடைவெளி இருக்கும். முடிந்தவரை ரோடுகளின் குறுக்காக ரோடு அமைவதை தவிர்த்துள்ளனர். தேவையான இடங்களில் சிக்னல்களை அமைத்துள்ளனர். டிராபிக் போலீசையும் கூட காண்பது அரிது. ரோடுகளை கடப்போருக்கு உரிய மரியாதை கொடுக்கின்றனர் வாகன ஓட்டுனர்கள். வாகனத்தில் செல்வோர் பொறுமையை கையாள்வது வியப்பிற்குரியது.

விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தை அடுத்தே, கோலாலம்பூரை தொட முடியும். நகருக்குள் நுழைந்ததுமே கோலாகலம் தொடங்கி விடும். அமைதியான, அழகாக வடிவமைக்கப்பட்ட கோலாலம்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன. மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வியக்க வைக்கின்றன. ஆட்சியாளர்களின் திட்டமிடும் திறனும், அதை செயல்படுத்தும் வேகமும் நாட்டை வேகமாக முன்னேற வைத்திருக்கிறது. எப்போதும், என்றும் கட்டுமான பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.முன்னேறிய நாடுகளை பார்த்தால், அங்கு என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்பதையெல்லாம் ஒவ்வொரு நாடாக சென்று பார்த்த மலேயர்கள், அவற்றை தங்களது நாட்டில் ஏற்படுத்த முனைந்துள்ளனர். உலகையே சுற்றிப்பார்ப்பதும், மலேசியாவை சுற்றிப்பார்ப்பதும் சமமாக கருதலாம்.

இந்திய, சீனா, மலேய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மக்களிடையே எவ்வித இன பாகுபாடும் வேறுபாடும் கிடையாது; போராட்டங்கள் குறைவு. ஒரே மலேசியா (1எம்) என்ற உத்வேகம் இவர்களிடையே உண்டு. வேகமாக முன்னேற்றங்கள், திட்டமிடலில் மட்டுமே வந்துள்ளது. மலேசியாவின் பொருளாதாரம், விவசாயத்தின் அடிப்படையில் இருந்தது; தற்போதோ தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. இன்ஜினியரிங் உற்பத்தி, பெட்ரோலிய ஏற்றுமதி, சுற்றுலா, விவசாயம் என முக்கிய வருவாய் தரும் இனங்கள் உள்ளன. எதில் எளிதாக வருவாய் ஈட்ட முடியும் என்பதை அறிந்து, அதில் முன்னேற்றத்தை காண்பிக்கின்றனர். உலகெங்கிலிருந்தும் மலேசியாவின் அழகை கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணம், அதற்கேற்ற திட்டமிடல்; அவற்றை செயல்படுத்துதல் போன்றவை வருவாயை உயர்த்தியுள்ளன. மலேசியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்... ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட முடியாது; ஓரிரு மாதங்கள் வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் சில நாட்களை செலவிட வேண்டும்.


பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்:


நகரின் நடுவே உலகின் அதிசயம்..."கோலாலம்பூர் பெட்ரோனாஸ்' என்ற இரட்டை கோபுரம். உலகிலேயே உயரமான கோபுரம். 451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலமே நில மட்டத்திலிருந்து, 557 அடி உயரத்தில் (170 மீ) அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக மைய கோபுரம் அழிந்த பின், இதுவே உலகின் பிரமாண்டமாக கருதப்படுகிறது. தினமும் 1700 பேர் மட்டுமே இந்த கோபுரத்திற்குள் சென்று வர அனுமதி உண்டு. இந்த இரட்டை கோபுரம் அமைந்துள்ள 17 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளன. இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகத்தை அமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததும், கடலுக்குள் சென்று விட்ட பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த அமைப்பிற்குள் 300 வகையான உயிரினங்கள் இடம் பெற்றுள்ளன. 60 ஆயிரம் சதுர அடிப்பரப்பில் இடம் பெற்றுள்ளது.90 மீட்டர் தூரத்திற்கு நீருக்கடியில் நீளும் குகை அமைப்பில், நின்று கொண்டால் போதும், கீழ் உள்ள நகரும் அமைப்பு, முழுவதுமாக சுற்றிக் காண்பித்து விடும். அத்தனை மீன் வகைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்க முடியும்.

அருங்காட்சியகம் ஸ்ரீபடானா:


கோலாலம்பூரில் எழில் மிக்க ஒரு மாளிகை ஸ்ரீபடானா. முன்னாள் பிரதமர் வசித்த மாளிகையை, இப்போது அருங்காட்சியமாக்கி விட்டனர். 50 ஆண்டு சுதந்திர தினத்தை பறைசாற்றும் நாணயத்தின் படத்தையும் ஓவியமாக வரைந்து பார்வைக்கு வைத்துள்ளனர். பார்லிமென்டில் உள்ள 228 உறுப்பினர்களின் பலத்தையும் உயர்த்திக் காட்டும் கை அமைப்பு அனைவரையும் கவர்கிறது.

பவுலியன்:



கோலாலம்பூரின் மற்றொரு அம்சம், "பவுலியன்' என்ற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். இங்கு அனைத்து வகை பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளனர். அழகாகவும் நேர்த்தியாகவும், இடவசதியுடன் அமைந்துள்ள இக்கடைகளில், பொருட்களையும் அழகுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். ஷாப்பிங் செய்வதற்கென்றே "மெகா சேல்' திட்டத்தை, மலேசிய சுற்றுலா வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து நடத்தினர். ஜூலை மாதம் துவங்கிய இந்த "மெகா சேல்' தள்ளுபடி விற்பனை உலக நாடுகளையும் கூட எட்டிப் பார்க்க வைக்கும். 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி அளிக்கின்றனர். கைவினைப்பொருள் கண்காட்சியும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி அரங்கில் துவங்கியுள்ளது. மலேசிய நாட்டின் பாரம்பரியமிக்க கலை நயமுடன் உருவாக்கப்படும் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

சன்வே பிரமிட்:

{{{image_alt}}}


சிங்க முகம் கொண்ட மாபெரும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சன்வே பிரமிட். நான்கு தளங்களைக் கொண்ட இந்த காம்ப்ளக்ஸ், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தோற்றம், உட்புறத்தோற்றம் இரண்டிலுமே கவனமுடன் வடிவமைத்துள்ளனர்.

மலாக்கா:


கோலாலம்பூரிலிருந்து மலாக்கா செல்வது எளிதானது; மலேசியா அமைத்துள்ள நீண்ட தூர "ஹைவே' ரோட்டில், மணிக்கு 100 கி.மீ.,வேகத்திற்கும் மேல் பறக்க முடியும். நேர்த்தியான ரோட்டில், விரைவாக செல்லலாம். ரோடுகளில் குறுக்கீடுகள் கிடையாது; யாரும் கடப்பதும் இல்லை. விலங்கினங்கள் கூட இந்த "ஹைவே'யில், குறுக்கிடாது. பழமையான, பழம்பெரும் நகரம் மலாக்கா. 15ம் நூற்றாண்டில், மலேசிய நாட்டின் வர்த்தகம் இங்கு நடந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரத்தை, "மலேசியாவின் வெனிஸ்' என அழைக்கின்றனர். 1500ம் ஆண்டுகளில், சுல்தான்கள் ஆட்சி இருந்தது. இதற்கான கோட்டை இடம் பெற்றுள்ளது. இந்த நகரில், புகழ் பெற்ற பானம் சென்டால். இந்த பானம், ஐஸ் கட்டிகளை உடைத்துபோட்டு, தென்னங்கருப்பட்டியை கலந்து தயாரிக்கின்றனர். மரத்தால் ஆன மாளிகை, இங்கே மன்னர்கள் சொகுசாக வாழ்ந்த வரலாற்றைக் கூறுகிறது. மன்னர்களின் படுக்கை அறைகளில், பட்டத்து அரசியே ஆனாலும் அனுமதியின்றி நுழைய முடியாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
Istana (Sultanate Palace), Melaka


பழம்பெரும் நகரமாக உள்ள இந்த மலாக்காவில், உள்ள அருங்காட்சியகத்தில், தமிழக மக்கள் பயன்படுத்திய பொருட் களை போன்றே பல உள்ளன. தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக இது திகழ்கிறது. சைக்கிள் முதல் இட்லி பாத்திரம் வரை பல வகை பொருட்களும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகமும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம். ஒவ்வொரு பொருளும் ஒரு சரித்திரம் சொல்வதாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நம்ம ஊரில் காணாமல்போன சைக்கிள் ரிக்ஷா சவாரியை அங்கு சுற்றுலா சவாரியாக்கியுள்ளனர். ரிக்ஷா முழுவதும் செயற்கை மலர் அலங்காரம் செய்து, அதில், பாடல் ஒலிபரப்பி, அழகாக ஒரு கி.மீ., தூரத்தை வட்டமிட்டு காட்டுகின்றனர். இதில், சவாரி செய்வதே ஒரு சிறப்பான அனுபவம் எனலாம்.

ஈபோ லாஸ்ட்வேர்ல்ட்:


Main entrance of the Lost World of Tambun


மலேசியா... என்றும் பசுமையாக மனதில் பதிந்து விடும் நாடு.


மீண்டும் ஒரு முறை செல்ல மாட்டோமா என ஏங்க வைக்கும். ஒரு முறை சென்றால், மீண்டும் செல்லத்தூண்டும். "மலேசியா, உண்மையான ஆசியா' (malaysia, truely asia) என்பதை சொல்வதோடு மட்டுமல்ல, செய்தும் காண்பித்துள்ளனர். விழாக் காலங்களில் பாரம்பரிய உடைகள், நடனங்கள், கேளிக்கைகள் எல்லாமே உண்டு. சுற்றுலா நாடாகவே மாற்றியும் காட்டியுள்ளனர். சபாஷ் தான் சொல்ல வேண்டும்.

பிரமிப்புகள் தொடரும்!


"எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்' என நாம் கூறினாலும், மலேசியர் எண்ணுவதெல்லாம், பிரமிப்பூட்டுபவை. "புத்ர ஜெயா' நகரம், 1995 முதல் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டங்களை கொண்ட இந்த நகரம், முற்றிலும் நவீனமயமானது. இங்கு, அரசு அலுவலங்கள், அவர்களுக் கான குடியிருப்புகள், ஆட்சியாளர்கள், அவர்களுக்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன; மேலும் கட்டுமான பணிகள்தொடர்கின்றன. நாட்டின் மின்சார தேவையை முற்றிலும் பூர்த்தி செய்கிறது நீர்மின் நிலையங்கள். இன்னும் ஒரு மெகா மின் உற்பத்தி திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த மின் திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அருகில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு விற்கும் திட்டமும் உண்டு. விவசாய நாடாக பின் தங்கியிருந்த மலேசியாவை, தொழில் நாடாக முதன்மை பெறச் செய்துள்ளனர் ஆட்சியாளர்கள். விவசாயம், இப்போது கடைசியாக உள்ளது. இங்கு முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வரிச் சலுகை அளிக்கின்றனர். தடையில்லா மின்சாரம் தருகின்றனர். தொழிலுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

ஆண்டு முழுவதும் கொண்டாட்டமே...!


மலேசிய சுற்றுலாத் துறையில் பணியாற்றும் வழிகாட்டி அசார் கூறுகையில்,""ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லலாம். குறிப்பிட்ட சுற்றுலா சீசன் கிடையாது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒவ்வொரு விழாக்கள் நடக்கும். இப்போது, மலேசியா நாடு முழுவதும் "மெகா சேல்' தள்ளுபடி விற்பனை விழா நடக்கிறது. 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இந்த "மெகா சேல்' நடக்கிறது. சுற்றுலா பயணிகளை இது வெகுவாக கவர்ந்துள்ளது,''என்றார்.

மலேசிய சுற்றுலா வாரிய அலுவலர் ஹனனி சுகிமன் கூறுகையில்,""இந்தியர், மலேயர், சீனர்கள் என முப்பெரும் பிரிவினர் இங்கிருந்தாலும், அனைவரும் "மலேசியர்களாகவே வாழ்கிறோம்; விழாக்களையும் ஒன்றாகவே கொண்டாடுகிறோம்' இதுவே ஒன்றுபட்ட மலேசியாவாக காட்டுகிறது. இந்த குறியீட்டிற்காக "1எம்' என கூறுகின்றனர். சுற்றுலா பயணிகளை எங்களது விருந்தினர்களாகவே கருதுகிறோம்,'' என்றார்.

நன்றி :(தினமலர் உலகம் செய்தி)

No comments:

Post a Comment