Monday, December 26, 2011

சுவாரசியமான தகவல்கள்;கருத்துள்ள சிரிப்பலைகள்!


பெல்ட்

இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''

ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''

ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''


இயல்புதானே?

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.


திருநாள்

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?


பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.


வரவேற்பு

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.


மும்மணிகள்

ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.


பேசும் எந்திரம்

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''


சீனிவாசன்

பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!''என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார். செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில்  வாசம் செய்யக் கூடியது அல்லவா? அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்''என்றார்.


உபயோகம்
1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான  மகாவீர் தியாகி எழுந்து  ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.


சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில்  ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்  தான்  சொல்கிறேன் .''


அறிஞர்

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''  வாலி  சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.


தெரியுமா?

பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு  சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
                                                                         இப்படிக்கு.
                                                                       ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!''என்று பதில் சொல்லியதாம்.
                                                                        இப்படிக்கு
                                                                       ஆர்ச் பிஷப்


உடைமை

அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன்  ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு  உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத் திறக்கவில்லை.


எந்த கட்சி?

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக்  கட்சிக்காக  தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை  சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான்.  ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்? அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''


கெளரவம்

இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.''என்றார்.உடனே எட்வர்ட்,''என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா?என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?''என்று சந்தேகம் கேட்டார்.''ஆமாம்.''என்று ஆசிரியர் கூறினார்.''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.''என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.


சோம்பேறி
 

மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''


மரியாதைக்குறைவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?''என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க  என்று  சொல்கிற  ஆள் நீ. பேசாம   நான் சொல்கிற  பல்லவியை  அப்படியே  போடு .''


Sunday, December 18, 2011

இலவச பி.டி.எப். புரோகிராம்கள்அடோப்(Adobe) நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (PDFPortable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஆறு புரோகிராம்களை இங்கு காணலாம். 

பி.டி.எப். பார்மட், பல ஆண்டுகளுக்கு முன்பு, அடோப் (Adobe)நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், பார்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப். பார்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது. டெக்ஸ்ட், இமேஜ், மல்ட்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப். பார்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பாஸ்வேர்ட் கொண்டு ஒரு பி.டி.எப். பைலை பாதுகாக்கலாம். எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலைக் காண முடியும். இந்த பைல்களைக் காட்டி எடிட் செய்திட வழி தரும் ஆறு இலவச புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. பி.டி.எப். எடிட் (PDF Edit)
:


 இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் பைலை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது. இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் (GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களை யும் மாற்றி அமைக்கலாம். இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயக்கலாம். இதனைப் பெற http://sourceforge.net/projects/pdfedit என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

2. ஓப்பன் ஆபீஸ் (Open Office): 


பி.டி.எப். எடிட்டிங் புரோகிராம்கள் குறித்துக் காண்கையில் ஓப்பன் ஆபீஸ் புரோகிராமினையும் இணைத்துப் பார்க்கலாம். Writer, Calc, Impress, Draw, Base and Math என இதில் ஆறு வகை வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் ரைட்டர் டூல் மூலமாக டாகுமெண்ட்களை உருவாக்கி, பி.டி.எப். பார்மட்டிற்குக் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பி.டி.எப். பைல் களை எடிட் செய்திட முடியாது. இதில் சில ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டு வந்து மற்ற வசதிகளையும் மேற்கொள்ளலாம்.

இணையத்தில் செயல்படும் எடிட்டர்கள்: சில பி.டி.எப். எடிட்டர்களை இணைய இணைப்பில் இயக்கி, டாகுமெண்ட் களைத் தயார் செய்திடலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

3. பி.டி.எப். வியூ (PDFVue): 


தற்போது சோதனைப் பதிப்பாக நமக்கு இணைய வெளியில் கிடைக்கும் பி.டி.எப். எடிட்டர் இது. இதனை https://docq.com/landing/pdfvue என்னும் முகவரியில் பெறலாம். தற்போது ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டை படிப்பது, கமெண்ட் எழுதுவது, குறிப்புகளை இணைப்பது, பக்கங்களை நீக்குவது அல்லது மாற்றுவது, நிரப்ப வேண்டிய டிஜிட்டல் படிவங்களை இணைப்பது போன்ற செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்கள் மூலம் இதனை அணுகிப் பெறலாம். பி.டி.எப். டாகுமெண்ட்களை நேரடியாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். இதில் உருவாக்கப்படும் எந்த ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டையும் டவுண்லோட் செய்து பிற பி.டி.எப். எடிட்டர்களில் படிக்கலாம். இந்த எடிட்டருடன் கிடைக்கும் deskPDF என்ற புரோகிராம் மூலம், அச்சிடக் கூடிய எந்த ஒரு பைலையும் இதற்கு அப்லோட் செய்து அதனை பி.டி.எப். பைலாக அச்சிட மாற்றலாம்.

4. பி.டி.எப். எஸ்கேப் (PDFescape): 

http://www.pdfescape.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராமில் ரீடர், எடிட்டர், பில்லர், டிசைனர் மற்றும் அன்னோடேட்டர் (eader, editor, filler, designer, and annotator) ஆகியவை தரப்படுகின்றன. இதன் மூலம் டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை இணைக்கலாம். இங்கு உருவாக்கப்படும் பி.டி.எப். பைல்களை, அனுமதி பெறாதவர்கள் படிக்க இயலாதபடி என்கிரிப்ட் செய்திடலாம்; பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஜாவா ஸ்கிரிப்டில் இயங்கும் எந்த பிரவுசர் மூலமாகவும்(எ.கா.Internet Explorer, Firefox, Safari, Chrome மற்றும் Opera) இதனை இணையத்தில் இருந்தபடியே இயக்கலாம்.

5. எக்ஸ்பர்ட் பி.டி.எப். எடிட்டர் (Expert PDF Editor): 


இந்த பி.டி.எப். எடிட்டர் ஏறத்தாழ மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பு போலவே யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதனால், இதில் இயங்குவது மிக எளிதாகவும் மனதிற்கு நிறைவாகவும் உள்ளது. இதில் பி.டி.எப். டாகுமெண்ட்களை படிக்கலாம், திருத்தலாம் மற்றும் அச்சிடலாம். பி.டி.எப். பைலுடன் அதன் உறுதித் தன்மையை அமைத்திட டிஜிட்டல் சர்டிபிகேட் இணைக்கலாம். பல பைல்களை ஒன்றாக்கலாம்; வெட்டி, ஒட்டி புதிய பைலாக இணைக்கலாம். இதன் எளிய தொகுப்பினை சோதனைத் தொகுப்பாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். கூடுதலாக, மேம்பட்ட வசதிகள் வேண்டும் எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். இந்த எடிட்டர் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.visagesoft.com /products/pdfeditor


பொதுவாக பி.டி.எப். டாகுமெண்ட்கள் பதிப்பிக்க மற்றும் அச்சிடும் நோக்கங்களுடன் உருவாக்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட பி.டி.எப். புரோகிராம்கள் அனைத்துமே இவற்றிற்கும் மேலாக நமக்குப் பணியாற்றுகின்றன. இவற்றிலிருந்து எது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயலாற்றுகிறதோ அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத் தலாம். 


(நன்றி: தினமலர் -கம்ப்யூட்டர் மலர்)

Tuesday, November 22, 2011

எழும்பூர் ரெயில் நிலையம்


அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.


ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரெயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர்.

ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர் தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு நுழைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் `எக்மோர்’ ஆக்கிவிட்டார்கள்.


இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரெயில் நிலையம் கட்ட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது.

முதலில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்கு தான் செயல்பட்டது.

இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோசாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.


சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.


வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரெயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.


அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரெயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரெயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.


அக்கால ரெயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரெயில் பயணம்.


இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. 


இந்தியாவிலேயே ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரெயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரெயில் களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக் காலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.


எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரெயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

சிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரெயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரெயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.    

நன்றி-தினத்தந்தி

Wednesday, October 26, 2011

மத்தாப்பு போல் புன்னகைத்தாள்

மத்தாப்பு போல் புன்னகைத்தாள் என்னிடம்

சங்கு சக்கரம் போல் என்னை சுற்றி வந்தாள்

ஊசி வெடி போல் படபடத்து பேசினாள்

ராக்கெட் போல பறந்தாள் என்னை விட்டு

புகைந்து போன புஸ்வானம் ஆனது என் காதல் 

(காதலில் தோற்ற ஒரு பட்டாசு கடைக்காரர்  பாடியது)


Friday, September 23, 2011

நேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய்


    நேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய் 


இன்று மண்ணில் விழுந்த சிறகானாய் 

நேற்று நெஞ்சில் நிறைந்த நினைவு 
இன்று பஞ்சாய் பறந்த கனவு 

நேற்று வரை  எனக்கு மட்டும் சொந்தம்
இன்று ஒருவன் கைபிடித்து போனதேன்

நேற்று வரை நீ வேறோ நான் வேறோ 
இன்று முதல் நீ யாரோ நான் யாரோ

                            (இது யார் எழுதிய காதல் பாட்டு தெரியுமா?)|
|
|
|
|
|
|
|

     

     ( உங்கள் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல 
செல்ல நாயை பிரிந்து வாடும் ஒருவனின் சோகப்பாட்டு 
இது. )

  
சாயி பாபா 

Friday, September 2, 2011

மொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள்மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய நெறிமுறைகளை மத்திய அரசு கமிட்டி அறிவித்துள்ளது.

கொடிய நோய்கள்…
செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.


மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை, செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.
ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.
அதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மத்திய நிபுணர் குழு
இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.
செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்…” என பரிந்துரைத்துள்ளது.
மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.
மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.
அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.
இவற்றை ஒரேயடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக ‘இந்திய டெலிகிராப் சட்டம் 1885′-ஐ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.

மக்களுக்கு எச்சரிக்கை…
இந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன.
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்… அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.
மற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம்.
உடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிக்கை

மொபைல் போன்களின் கதிரியக்கம் குறித்து இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான்.
இதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. அரசு நடவடிக்கையைவிட தனிப்பட்டோர் ஒத்துழைப்புதான் இதில் முக்கியம் என்று இந்த ஆராய்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சை எனும் ஏழைத் தோழன்.


வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.
சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.
இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.
எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…
1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.
2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.
3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.
.
4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.
5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !
7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !
இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.
எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது.
அட… என்ன ? எங்கே கிளம்பிட்டீங்க ? எலுமிச்சை வாங்கவா ? ஒரு கப் எனக்கும் தயாராக்குங்க.
நன்றி : தமிழ் ஓசை

இன்டர்நெட் தோற்றமும் பயன்பாடும்இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன

1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.
இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.
5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.


இன்றைய நவீன உலகில் இன்டர்நெட் பல பயன்களை அளித்த போதும், அவை மற்றொரு இருளான பக்கத்தையும் கொண்டிருக்கின்றன. தினசரி, தாங்கள் வாங்கிய பொருட்களுக்குக் கட்டணம் கட்டுவதிலிருந்து பொழுதுபோக்கிற்காக விளையாடுவது வரை இன்டர்நெட்டில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என்பதே தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய பிணைப்பு இருக்கிறது.

செலவழிக்கும் நேரம் அதிகம் ஆக ஆக மன அழுத்தமும் அதிகமாகிறது. இவர்களில், 18 பேர் ஒரு நாளைக்கு மிக அதிக நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கின்றனர். இவர்களை “இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்கள்’ என்று வகைப்படுத்தலாம்.சாதாரண மக்களை விட இன்டர்நெட்டில் நேரம் அதிகமாக செலவழிப்பவர்களின் மன அழுத்தம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது

சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகி றார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள் ளனர். இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் -- ஆகியன வற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டு ள்ளனர். எனவே இது தடை படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.
ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா! இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு இண்டர்நெட்டை பயன்படுத்துவது அனைவுக்கும் நல்லதுதானே?   

Sunday, June 12, 2011

இமெயில் செய்திகளை ட்யூன் செய்க


நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறுபவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல்லது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.
பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரியர்கள், கடிதம் ஒன்று எப்படி எழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுபவரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் சில பயனுள்ள தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
சுருக்கமாக: வேகமாக அஞ்சல்கள் சென்றடைய வேண்டும்; நம் செய்தி பெறுபவரை உடனே அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நாம் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துகிறோம். எனவே, நாம் தெரிவிக்க விரும்பும் தகவல்களையும் சுருக்கமாக, மின்னஞ்சல் கடிதத்தில் அமைக்க வேண்டும். நாம் எழுதுவது ஒரு புத்தகமோ அல்லது காதல் கடிதமோ அல்ல; சில தகவல்கள். எனவே சுருக்கமாக அவற்றை அமைப்பது உங்களுக்கும் பெறுபவருக்கும் சரியான தகவல் தொடர்பினை ஏற்படுத்தும்.


சிறிய சப்ஜெக்ட் வரி: மிக நீளமான சப்ஜெக்ட் வரியும், சப்ஜெக்ட் கட்டத்தில் ஒன்றுமே எழுதாமல் அனுப்புவதும் தவறு. உங்கள் கடிதம் குறித்த பொருளைத் தெரிவிக்கும் ஒன்றிரண்டு சொற்கள் போதுமே.


எழுத்து மற்றும் இலக்கண சோதனை: நம் கடிதம் பிழைகளுடன் இருந்தால், நம்மைப் பற்றி அஞ்சலைப் பெறுபவர் என்ன நினைப்பார்? கடிதம் எழுதி முடித்த பின்னர், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளைத் திருத்திய பின்னரே, அஞ்சலை அனுப்புதல் நல்லது.

சுருக்கு சொல், குறும்படங்கள் எதற்கு?
சொல் தொடர்களின் முன் எழுத்துக்கள் (Acronyms) அடங்கிய சொற்கள் மற்றும் எனப்படும் குறும்படங்கள் பயன் படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்குத் தெரிந்திருக் கலாம்; பெறுபவருக்குத் தெரிந்திருக்கும் என்று என்ன உறுதி. அதே போல இந்த குறும்படம் எதற்கு என்று எண்ணும் அளவிற்குப் பல குறும் படங்கள் உள்ளன. எனவே, இவற்றை அமைத்து உங்களின் மற்றும் பெறுபவரின் நேரத்தை வீணடிக்க வேண்டாமே.

பெரிய எழுத்துக்கள் எதற்கு?
ஒரு சிலர், தங்களின் கடிதத்தில் உள்ள செய்தி மிக முக்கியமானது என்ற எண்ணத்தில், அனைத்தும் பெரிய கேப்பிடல் எழுத்துக்களால் செய்தியை அமைப்பார் கள். இது, கோபத்தில் கத்திப் பேசுவதற்கு இணையாகும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

நகல்கள்: உங்கள் கடிதத்தின் நகலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்ப வேண்டாமே! யாருக்கு அஞ்சலில் உள்ள தகவல்கள் சேர வேண்டுமோ, அவர்களின் முகவரிக்கு மட்டும் அனுப்பலாமே! தேவையற்ற பலருக்கு அனுப்புவது நல்லதில்லை. மேலும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஏன் அனைவருக்கும் தெரிய வேண்டும்?

பெயர் கூறி வாழ்த்து: உங்கள் அஞ்சலைப் பெறுபவரின் பெயருடன், அவரை அன்பாக அழைக்கும் சொல்லையும் சேர்த்து எழுதுவது, உங்களின் நல்ல குணத்தை எடுத்துக் காட்டும்.

முடிவு: கடித முடிவில் நீங்கள் சொல்ல வந்த செய்தியினை முடித்து விட்டீர்கள் என்று தெரியும்படி ஒரு வரி சேர்க்க வேண்டும். உங்கள் பெயர் அல்லது டிஜிட்டல் கையெழுத்தினை இணைக்கலாம்.

தொடரைக் காட்டுக: மின்னஞ்சல் செய்தி ஒன்றுக்கு நீங்கள் பதிலளிக்கையில் ரிப்ளை பட்டன் அழுத்தி அமைப்பது நல்லது. அப்போதுதான், எந்த விஷயத்திற்கு நீங்கள் பதில் எழுதுகிறீர்கள் என்று மற்றவர்களும் தெளிவாக அறிய முடியும். ஏற்கனவே வந்த கடிதம் மிக நீளமாக இருந்தால், முக்கிய தகவல் அடங்கிய வரிகளை மட்டும் இணைக்கலாம்.


எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் மற்றவருக்கான அஞ்சலை அமைக்கவும். இவர் தானே, அல்லது இவன்தானே என்ற முறையில் எப்படியும் அமைக்கக் கூடாது.


(நன்றி: தினமலர் -கம்ப்யூட்டர் மலர்)


சர்க்கரை என்கிற ஓர் இனிய எதிரி


சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது. போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

சராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்ரமிக்கும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம்.


பாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.

சர்க்கரையும் அதுபோல தான். கரும்பில் இருந்து பெறப்படும் சாறு பின்னர் மொலஸ்ஸஸ் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு பிரவுன் சுகர் மற்றும் வொய்ட் சுகர் என்ற இரு வேறு பொருள்களாக பெறப்படுகிறது. இந்த வெண்மை நிற படிக வடிவம் பெற்ற சர்க்கரை (வொய்ட் சுகர்) மனிதனுக்கு வேண்டிய எந்தவித சத்துள்ள பொருளையும் தன்னுள் கொண்டிருப்பதில்லை. இது உடலுக்குள் செல்லும் போது அதனை எவ்வாறு எடுத்து கொள்வது என்பதில் வயிற்றுக்குள் சிக்கலான போராட்டமே நடைபெறுகிறது.

பழக்கவழக்கத்திற்கு அடிமையாதல்;

போதை பொருளான ஹெராயின் எடுத்து கொள்ளப்பட்ட உடனேயே அது தீவிரமாக செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் துகள்கள் உட்கொண்ட பின் விரைவாக செயல்புரிந்து கிளர்ச்சி நிலையினை அடைய செய்கிறது.

சர்க்கரை உட்கொள்ளும் போது அது மெதுவாகவே செயல்புரிகிறது. உடலில் கொழுப்பு சத்து தேவைப்படும் வரை கல்லீரலில் சர்க்கரை பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. மற்ற போதைபொருள் போன்றே இதுவும் நம்மை அந்த பழக்கத்திற்கு அடிமையாக செய்கிறது. சுமார் 95 சதவீத மக்கள் சர்க்கரை பயன்பாட்டில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் என திட்டமதிப்பீடு செய்துள்ளனர்.

உறுப்புகளின் பாதிப்பு;

ஹெராயின் போதைபொருள் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியவற்றை விட மூளையையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பெரும்பாலானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்று மேலும் அதிகமாக அடிமையாகும் நிலையே காணப்படுகிறது.

சர்க்கரை மெதுவாகவே தன் வேலையை செய்கிறது. ஆனால் அதன் பாதிப்பின் தன்மை மிக அதிகமாகவே காணப்படுகிறது. சற்று அதிகமாக எடுத்து கொண்டால் அதன் பாதிப்பு உடலில் பலமாகவே எதிரொலிக்கிறது. இத்தகைய தன்மையினால் ஹெராயினை காட்டிலும் அதிக தீமை வாய்ந்ததாகவே இது கருதப்படுகிறது.

மிக அதிக அளவாக 8 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து கொள்ளுதல் போதுமானது என பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் சர்க்கரையின் அளவு எப்பொழுதும் அதிகமாகவே காணப்படுகிறது. காலையில் குடிக்கும் காபி, மதியம் எடுத்து கொள்ளும் சாக்லேட் மற்றும் இரவில் ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம் என நம்மை அறியாமலேயே அளவுக்கதிகமான சர்க்கரையை மறைமுகமாக எடுத்து கொள்கிறோம்.
பதப்படுத்தப்பட்ட சர்க்கரையில் சுக்ரோஸ் என்ற வேதிபொருள் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. இந்த சர்க்கரை பொருள் உடலின் செயல்பாட்டுக்கு அவசியமில்லாத போது வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் அந்த இடங்கள் நிரப்பப்படும் போது அவை கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளில் சேர ஆரம்பிக்கின்றன.
மேலும் அது இரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
எனவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலின் பி.எச். சமன்பாட்டினை (அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாடு) வெகுவாக பாதிக்கிறது.

மேலும் அமில நிலையை உடலில் அதிகரிக்கிறது. குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் பைருவிக் அமிலம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகும். இது நம் உடலின் அடிப்படை அமைப்பான செல் அமைப்பை பாதிக்கிறது.
அளவுக்கதிகமான அமில தன்மை உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. மற்றும் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த அமில தன்மையை சமன் செய்ய உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம் என்ற வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பற்களில் பாதிப்பு, வலு குறைந்த பற்கள் மற்றும் எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரசிஸ் போன்ற வியாதிகள் ஏற்பட ஏதுவாகின்றன.

இத்தகைய தன்மை வாய்ந்த சுக்ரோஸ் மிகுந்த மேம்படுத்தப்பட்ட சர்க்கரையின் பாதிப்பை தவிர்க்கும் வழிகள் பற்றி பார்ப்போம்.

1) ஒழுங்கான உணவு முறை

உணவு உட்கொள்ளுதலை சீராக வைத்திருத்தல் அவசியம். தினமும் மூன்று வேளை உணவு மற்றும் இரு முறை நொறுக்கு தீனி என எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் ஐந்து வேளைகள் சிறு சிறு அளவாக உணவினை எடுத்து கொள்வதும் நலம் தரும். ஒழுங்கான முறையில் உணவு எடுத்து கொள்ளாவிடில் அது இரத்தத்தில் சர்க்கரை அளவினை பாதிக்கும். அவர்களுக்கு பசி எடுப்பது போன்ற உணர்வு இருக்கும். எனவே இனிப்பான பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு தோன்றும்.

2) முழு உணவினை தேர்ந்தெடுத்தல்

சாப்பிடும் பொழுது சர்க்கரை அளவு குறைவான உணவை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் கனிகள் ஆகியவற்றை அதன் இயற்கையான நிலையிலேயே உட்கொள்ளுங்கள். அது நமது உடலுக்கு ஊறு விளைவிப்பதில்¬¬. மேலும் அவற்றின் முழு பயனும் நமக்கு கிடைக்கின்றன.

3) ஊட்டசத்துள்ள காலை உணவு

காலையில் உண்ணும் உணவு ஆரோக்கியமான புரதம், கொழுப்பு மற்றும் ஊட்டசத்து மிகுந்தவையாக இருப்பது நல்லது. மாறாக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவு பொருள் தவிர்க்கப்படல் வேண்டும்.

4) எல்லா வேளைகளிலும் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு அவசியம்

ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த பதார்த்தங்கள் இருப்பது போல் சாப்பிடுவது அவசியம். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் ஆகும்.

5) நறுமண பொருள்களின் பயன்பாடு

கொத்தமல்லி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு மற்றும் இதுபோன்ற இயற்கையான நறுமண பொருள்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் உணவினை இயற்கையாகவே இனிப்புள்ளளதாக மாற்றுகிறது. மேலும் பசியையும் குறைக்கிறது.

6) தாதுபொருள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு

அன்றாட உணவில் தாதுபொருள்கள் மற்றும் அனைத்து வைட்டமின்களும் நிறைந்து காணப்படுவது மிக சிறந்தது. குறிப்பாக குரோமியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி3 ஆகியவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியினை நன்றாக செய்கிறது.

7) உடலினை அசையுங்கள்

உடற்பயிற்சி, நடனம் மற்றும் யோகா ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். எந்த செயலையும் மகிழ்வுடன் செய்யுங்கள். அது உங்களது மன இறுக்கத்தை போக்குகிறது. ஆற்றலை பெருக்குகிறது. மேலும் சர்க்கரை பொருள் தேவையினை வெகுவாக குறைக்கிறது.

8) போதிய தூக்கம் அவசியம்
9) டிடாக்ஸ் முறை

தற்போதுள்ள உணவு பழக்கத்தில் ஏற்படும் நச்சுகளை முற்றிலும் களைவதற்காக டிடாக்ஸ் என்ற முறை உள்ளது. இதனை எடுத்து கொண்டவர்கள் தங்களது சுவை விசயத்தில் பழைய நிலைக்கு மாற்றி கொள்கின்றனர். மேலும் இனிப்பு பொருள்களின் மீது உள்ள தாகத்தினையும் அது வெகுவாக குறைக்கிறது. பின்னர் சர்க்கரை பொருளின் மீதான ஆர்வம் குறைந்து முற்றிலும் மறைந்து விடுகிறது.

10) சர்க்கரை பயன்பாட்டில் கவனம் தேவை

சர்க்கரை பொருள் மீதான விருப்பத்தை எப்பொழுதும் ஒரு கட்டுபாட்டிற்குள் வைத்து இருந்தால் அது நன்மை தருவதாக அமையும்.

11) கூடுமானவரை தவிர்த்தல் நலம்

உங்களது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இனிப்பினால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

12) செயற்கை சர்க்கரை பயன்பாட்டினை தவிருங்கள்

செயற்கை சர்க்கரை பயன்பாடு தவிர்க்க வேண்டியவற்றுள் ஒன்று. இல்லையென்றால் அது இனிப்பின் மீதான தாகத்தை அதிகரிக்க மட்டுமே செய்யும்.

13) பொருட்களின் லேபிளை பாருங்கள்

ஏதேனும் ஒரு உணவு பொருளை வாங்கும் பொழுது அதனுடைய லேபிள் பகுதியை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால் அதில் சர்க்கரை பொருளின் அளவு அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே குறைவான சர்க்கரை கலந்த உணவு பொருளை பார்த்து வாங்குவது சிறந்தது.

14) சர்க்கரை பொருளின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்

இனிப்பூட்டிகளான கார்ன் சிரப், பிரக்டோஸ் நிறைந்த கார்ன் சிரப், சுக்ரோஸ், டெக்ஸ்ட்ரோஸ், தேன், மொலஸ்ஸஸ், டர்பினடோ சர்க்கரை மற்றும் பிரவுன் சுகர் போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

15) மறைமுகமான பயன்பாட்டினை தவிர்த்தல்

சிக்கலான கார்போஹைட்ரேட் பொருள் கொண்டதென நாம் கருதும் பிரெட், பாஸ்தா மற்றும் பேஜல்ஸ் போன்றவை உண்மையில் கார்போஹைட்ரேட் நிறைந்தவை அல்ல. அவை மறைமுகமாக தம்முள் அதிகமான சர்க்கரை பொருள் மட்டுமே கொண்டவை. அவை நன்கு பதப்படுத்தப்பட்டவை. அதனால் அவை சர்க்கரை போன்று தான் நம் உடலில் செயல்படும். எனவே அவற்றை தவிர்த்திடல் வேண்டும்.

16) எல்&குளுடமின் பயன்பாடு

எல்&குளுடமின் 1000&2000 மி.கி. அளவிற்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை என எடுத்து கொள்வது அவசியம். இதனால் மூளை அதற்கு தேவையான ஆற்றலை இதிலிருந்து பெற்று கொள்கிறது. மேலும் சர்க்கரை பயன்பாடு பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.

17) மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள்

அமைதியான இடம் ஒன்றை தேர்ந்தெடுங்கள். பின்னர் நல்ல முறையில் அமர்ந்து சில நிமிடங்கள் சீரான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறிது நேரத்திற்கு பின்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தானாகவே மறைந்து விடும்.

18) உற்சாகமாக இருங்கள்

அடிக்கடி உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். முடிந்தால் இயல்பாக நடை பழகுங்கள். 10&20 நிமிடங்கள் இவ்வாறு நடை பயிற்சி மேற்கொண்டால் உங்களது எண்ணம் சீர்படும். பின்னர் தேவையில்லாத நொறுக்கு தீனிகளை உண்ண வேண்டும் என்ற எண்ணம் எழாது.

19) அதிகமான நீர் அருந்துங்கள்

அதிகமான அளவிற்கு நீர் அருந்துதல் அவசியம். சில சமயங்களில் உண்ணும் உணவே அதிக தாகத்தை ஏற்படுத்தி பின்னர் மேலும் அதுபோன்ற உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவையான அளவில் நீர் அருந்துவது நன்மை பயக்கும்.

20) பழங்களை உண்ணுங்கள்

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அப்பொழுது பழங்களை சிறு துண்டுகளாக எடுத்து கொள்ளுங்கள். இதனால் இனிப்பு பதார்த்தங்கள் உண்டது போன்ற நிறைவும் ஏற்படும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.

இவ்வாறு நமக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் சர்க்கரை பொருளை அளவுக்கதிகமாக பயன்பாட்டில் எடுத்து கொள்ளாமல் நம்முடைய உடலினை பாதுகாத்து கொள்வோமாக.